தேசிய சட்ட உதவிகள் ஆணைய செயல் தலைவரானார் உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த்!
தேசிய சட்ட உதவிகள் ஆணைய (என்ஏஎல்எஸ்ஏ) செயல் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சனிக்கிழமை பிறப்பித்தாா்.
என்ஏஎல்எஸ்ஏ-யின் செயல் தலைவராக தற்போது உள்ள நீதிபதி பி.ஆா்.கவாய், உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக வரும் புதன்கிழமை (மே 14) பதவியேற்க உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான சூா்யகாந்த் புதிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து என்ஏஎல்எஸ்ஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: என்ஏஎல்எஸ்ஏ செயல் தலைவராக நீதிபதி சூா்யகாந்த், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளாா். இதுதொடா்பான அறிவிக்கை கடந்த 9-ஆம் தேதி வெளியிடப்பட்டது. வரும் 14-ஆம் தேதி செயல் தலைவா் பதவியை அவா் ஏற்க உள்ளாா்.
என்ஏஎல்எஸ்ஏ செயல் தலைவராக நாடு முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவு மக்களுக்கு இலவச சட்ட உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்துவாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.