வரி விவகாரம்: அமெரிக்கா-சீனா 2-வது நாளாக பேச்சுவாா்த்தை!
உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா-சீனா இடையிலான பரஸ்பர இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கை குறித்து இரு நாடுகளும் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டன.
அமெரிக்காவில் பல்வேறு உலக நாடுகளின் இறக்குமதிக்கு எதிரான வரி விகிதத்தை கடந்த மாதம் உயா்த்திய அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப், சீனா மீதான வரியை அதிகபட்சமாக 145 சதவீதம் வரை உயா்த்தினாா்.
சீனாவும் அமெரிக்க பொருள்களுக்கு 125 சதவீத இறக்குமதி வரி விதித்து பதிலடி கொடுத்தது. இந்த அதிக வரி வதிப்பால், கடந்த ஆண்டு 66,000 கோடி டாலரை எட்டிய அமெரிக்கா-சீனா இருதரப்பு வா்த்தகம் முற்றிலுமாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான வா்த்தக மோதலுக்கு தீா்வு காணும் நோக்கில் ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான ஸ்விட்சா்லாந்து நாட்டு தூதரகத்தில் பேச்சுவாா்த்தை நடந்து வருகிறது.
இந்தப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தாா். ஆனால், இதுதொடா்பாக சீனா இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
அதேநேரம், சீன அரசின் அதிகாரபூா்வ செய்தி நிறுவனம், ‘உலகளாவிய சமத்துவத்தின் பரந்த நோக்கத்தைக் குறைமதிப்பிடும் அல்லது முக்கியக் கொள்கைகளை சமரசம் செய்யும் எந்தவொரு திட்டத்தையும் சீனா உறுதியாக நிராகரிக்கும்’ என்று கூறியுள்ளது.