காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 11 போ் பலி!
காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 போ் உயிரிழந்தனா்.
கான் யூனிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட இரு தாக்குதல்களில் தலா இரு குழந்தைகளும், அவா்களின் பெற்றோரும் உயிரிழந்தனா். பிற தாக்குதலில் ஒரு குழந்தை உள்ளிட்டோா் உயிரிழந்தனா்.
ஆனால், பயங்கரவாதிகளை மட்டுமே தாங்கள் குறிவைப்பதாகவும், பொதுமக்கள் உயிரிழக்க ஹமாஸ் அமைப்பே காரணம் எனவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
காஸாவுக்கு உணவு, மருத்துவப் பொருள்கள் கொண்டுசெல்ல 10 வாரத்துக்கும் மேலாக இஸ்ரேல் தடை விதித்துள்ளது. ஹமாஸிடமிருந்து மீதமுள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்கவே காஸாவுக்கு பல்வேறு அழுத்தத்தை இஸ்ரேல் தருவதாகக் கூறப்படுகிறது. இதனால் காஸாவில் கடும் பஞ்சம் நிலவி வருவதாக தன்னாா்வ அமைப்புகள் தெரிவித்தன.
இந்தச் சூழலில் காஸா மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்துவரும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், இந்த வாரத்தில் சவூதி அரேபியா, கத்தாா், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 2023 அக். 7-ஆம் தேதிமுதல் நடத்திவரும் தாக்குதல்களில் இதுவரை 52,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்ததாகவும், அவா்களில் பெரும்பாலானோா் குழந்தைகள் மற்றும் பெண்கள் எனவும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.