ஆஸி. பந்துவீச்சாளர்களும்.. வான் பாதுகாப்பு அமைப்பும்..! லெஃப்டினன்ட் ஜெனரல் பு...
மகாராஷ்டிரா: பிரதமர் திறந்த `சத்ரபதி சிவாஜி சிலை' சேதம்; பிரமாண்டமாக புதிய சிலையை திறந்த பட்னாவிஸ்
மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்காட் கோட்டை அருகே உள்ள கடற்கரையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலையை திறந்து வைத்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையில், அந்த சிலை உடைந்து விழுந்தது. சிலை திறக்கப்பட்டு 9-வது மாதத்தில் இப்படி சேதமானது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. தரம் மிகவும் குறைவாக கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து அதே இடத்தில் புதிய சிலையை அமைக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. மகாராஷ்டிராவிலேயே மிகப்பெரிய சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன் படி புதிய சிலை நிறுவப்பட்டுள்ளது. அதனை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் திறந்து வைத்துள்ளார்.
எந்த வித அறிவிப்பும் இல்லாமல் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயுடன் சென்று இச்சிலையை திறந்து வைத்து தேவேந்திர பட்னாவிஸ் சிவபூஜை செய்தார். இச்சிலை 91 அடி உயரம் கொண்டது ஆகும். இதில் 10 அடி பீடம் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர சத்ரபதி சிவாஜி கையில் இருக்கும் வாள் 23 அடி நீளத்தில் செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், ''புதிய சிலை ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. சிலை நிறுவுவதற்கு முன்பு நிபுணர்கள் புயலின் போது காற்றின் வேகத்தை ஆய்வு செய்து எந்த மாதிரியான காற்றையும் தாங்கும் வகையில் சிலை வடிவமைத்துள்ளனர். 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் வகையில் சிற்பி ராம் சுதார் இதனை வடிவமைத்துள்ளார்.
மும்பை ஐ.ஐ.டி மற்றும் சர் ஜெ.ஜெ. ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் இதற்கு தேவையான உதவிகளை செய்துள்ளது. சிலையை சுற்றிய இடம் கையகப்படுத்தப்பட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வகையில் மேம்படுத்தப்படும்'' என்றார்.
இச்சிலையை வடிவமைத்த ராம் சுதாருக்கு 100 வயதாகிறது. அவர் இதற்கு முன்பு சர்தார் வல்லபாய் பட்டேல், அயோத்தியில் 251 அடி ராமர் சிலையை வடிவமைத்தவர். புதிதாக பாபாசாஹேப் அம்பேத்கர் சிலையை வடிவமைத்து வருகிறார்.