பிரேக்-அப்; உடனே அடுத்த ரிலேஷன்ஷிப்... சரியா? - உளவியல் ஆலோசகர் வழிகாட்டல்
'இதுவும் கடந்து போகும்' - ஒரு சிறந்த வாக்கியம். மனநிலையும்கூட. குறிப்பாக, காதல் தோல்வியில் இருப்பவர்கள் அவசியம் கொள்ளவேண்டிய மனநிலை இது. 'நமக்குள்ள சரியா வராது, பிரேக்-அப் பண்ணிக்கலாம்' என்று இன்று பல காதலர்கள் பரஸ்பரம் முடிவெடுத்துப் பிரிந்துசெல்கிறார்கள். என்றாலும், அதற்குப் பின்னான நாள்களில், கைவிட்டுப்போன காதலின் துயரத்திலிருந்து மீண்டுவருவது அவர்களுக்கு எளிதான காரியமாக இருப்பதில்லை.

"பிரேக்-அப் தாக்கத்திலிருந்து விடுபடுவது ஆளைப் பொறுத்தும், அவரவர் ஆளுமையைப் பொறுத்தும் மாறுபடும்" என்கிறார், உளவியல் ஆலோசகர் திவ்யபிரபா. காதல் பிரிவிலிருந்து மீள, திவ்யபிரபா தந்த ஆலோசனைகள் இங்கே.
"தன்னைப் புரிந்துகொள்வதும், தன் காதலரை/காதலியைப் புரிந்துகொள்வதும்தான் பிரேக்-அப் வலியிலிருந்து மீள்வதில் முதற்கட்டம்.
மது, புகை உள்ளிட்ட போதைப் பழக்கங்களை உடனே நிறுத்தும்போது விளைவுகள் ஏற்படுவதைப்போல, பிரேக்-அப்புக்குப் பின்னரும் சில உளவியல் விளைவுகள் ஏற்படும்.
இந்தச் சூழல் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பை யதார்த்த மனநிலையிலிருந்து அணுக வேண்டும். சிலர், உடனே அடுத்த ரிலேஷன்ஷிப்பைத் தேர்ந்தெடுக்க நினைப்பார்கள். அப்படிச் செய்தால், எதிர்மறை விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம்.

இந்தக் காலகட்டங்களில் செல்ஃப் கேர் மிகவும் அவசியம். அழகு முதல் ஆரோக்கியம் வரை நம்மை நாமே கவனித்துக்கொள்ள வேண்டும்.
'பிரேக்-அப்னு சொல்லிட்டு ஜிம்முக்குக் கிளம்பிட்டான் பாரு' என்று அடுத்தவர் என்ன கமென்ட்ஸ் கொடுப்பார்கள் என்றெல்லாம் சிந்தித்து மனதை குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை. இது நமது வாழ்க்கை என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
பெண்கள்தான் அழ வேண்டும் என்று இறுக்கம்கொள்ள அவசியமில்லை. அழுகை, நல்லதொரு ஸ்ட்ரெஸ் பஸ்டர். எனவே, ஆண்களும் வலியை அழுகையாக வெளியேற்றலாம்.
அதே சமயம், ஒரேயடியாக அதைப் பற்றியே நினைத்து அழுது புலம்புவதைத் தவிர்க்க வேண்டும். பிரிய நேர்ந்த காரணங்களைப் பற்றியெல்லாம் யோசித்துக்கொண்டே உடைந்துபோய் உட்கார்ந்திராமல், நிதர்சனத்தை ஏற்கப் பழக வேண்டும்.

பிடித்த இடங்களுக்குச் செல்லலாம். இழுத்துப் போர்த்தி நன்றாகத் தூங்கலாம். தனக்கு நேர்ந்ததைப் பற்றி நம்பகமான நல்ல நபர்களிடம் விவரித்துச் சொல்லி, உளவியல் வழிகாட்டுதல்களைப் பெறலாம்.
இந்த நம்பகமானவர்களில் முதன்மையானவர்கள், பெற்றோர்களே. முடிந்தவரை அவர்களிடம் விஷயத்தைப் பகிர்ந்துகொள்ளலாம். சிநேகத்துடன் அமைந்துவிட்ட பெற்றோர்கள் எனில் பிரச்னையே இல்லை, புரிந்துகொண்டு கைகொடுப்பார்கள். எதிர்மறையாகப் புரிந்துகொள்கிற பெற்றோரிடமும் பக்குவமாகச் சொல்லி ஆறுதல் தேடலாம். எப்போதுமே பெற்றோர்கள் நல்ல வழித்துணை.
உணர்வுத் தடுமாற்றங்கள், வாழ்க்கையின் ஒரு பகுதியாக நடந்துகொண்டே இருப்பவைதான். அவற்றிலிருந்து மீளும் வழிமுறைகளைக் கண்டடைய வேண்டும். 'ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருந்தா கடைக்குப் போய் ஹேர்கட் பண்ணிக்குவேன்' என்று சொல்கிற ஆள்களும் உண்டு. நமக்கு எது ஸ்ட்ரெஸ் ரிலீஃபைத் தருகிறது எனத் தெரிந்துகொண்டு, அவற்றைச் செய்யலாம்.
பிரேக்-அப் சமயம் ஏமாந்துவிட்டதாகவோ, தோற்றுவிட்டதாகவோ உணர்வுக் குவியல்கள் ஏற்படும். எல்லாம் ஒருவகை மனக்குழப்பமே. பாசிட்டிவ் எண்ணங்களை முன்னிறுத்தி, பயணத்தைத் தொடர வேண்டும். அட்வைஸ்களுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் காதுகொடுத்துக்கொண்டே இருக்க வேண்டியதில்லை. அதுவே ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்திவிடலாம்.

உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலை, ஏதாவது ஒரு ரிலேஷன்ஷிப் மெயின்டெய்ன் செய்துகொண்டேயிருக்கத் தோன்றுவது என்று சிலர் இருப்பார்கள்.
அதீத மனவலி, நீண்ட கால மன அழுத்தம் என்று இருப்பது, மேலும் மனதைப் பாதிக்கும்படி ஏதாவது ஒரு சம்பவம் நடந்தால் அதிலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்பமுடியாமல் பாதிப்படைவது என இவையெல்லாம் உளவியல் கோளாறு.
இதை பார்டர்லைன் பர்சனாலிட்டி டிஸ்ஸார்டர் (Borderline personality disorder) என்போம். இது, போகப்போக உடலையும் பாதிக்கத் தொடங்கும். எனவே, அவற்றிலிருந்து மீண்டு வெகு விரையில் இயல்பு வாழ்க்கைக்கு வர வேண்டும்'' என்றார் திவ்யபிரபா.