கருணாநிதி பன்னாட்டு மாநாட்டு அரங்கம் பணியை விரைந்து முடிக்க அமைச்சா் எ.வ.வேலு உத...
Relationship: இரண்டாவது திருமணத்திலும் பிரச்னையா? அப்படியென்றால் - சைக்காலஜிஸ்ட் அட்வைஸ்
பிரபலங்கள் முதல், சாமானிய மக்கள் வரை பலரும், பல காரணங்களால் தங்களின் திருமண பந்தத்தில் இருந்து சுமுக முடிவுடன் பிரிவதைக் காண்கிறோம்.
இவர்களில் சிலர் இரண்டாவது திருமணம் செய்துகொள்வது, அவர்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்தக்கூடிய நல்ல முடிவாக அமையலாம். ஆனால், அந்தத் திருமணமும் தோல்வியில் முடியும்போது, பிரச்னையைக் கொஞ்சம் உள்நோக்கிப் பார்க்க வேண்டும் என்கிறார் உளவியல் நிபுணர் பிருந்தா ஜெயராமன்.
இரண்டாவது திருமணமும் தோல்வியில் முடியாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென பிருந்தா ஜெயராமன் கூறும் ஆலோசனைகள் இங்கே...

''இரண்டாவது திருமணமும் தோற்றுப்போகிறது அல்லது தோற்றுப்போகும் தருவாயில் இருக்கிறதா? அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி... தன்னை உள்நோக்கி கவனிக்க ஆரம்பிப்பதும் அவசியம். அதாவது, 'நான் என்னை எப்படி மாற்றிக்கொண்டிருந்தால் இந்த இரண்டாவது திருமணத்தை என்னால் காப்பாற்றியிருக்க முடியும்' என்பதை யோசிக்க வேண்டும்.
இரண்டு துணைகளுமே, 'நீ எனக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது இல்லை' என்று புகார் சொல்லியிருந்தால், அது உண்மையாகவும் இருக்கலாம். நீங்கள் உங்கள் கணவன்/ மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையா என்று பரிசீலித்துப் பார்க்கலாம். திருமண பந்தம் முறிந்துபோவதற்கு மிக முக்கியமான காரணம் பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் இதுவாகத்தான் இருக்கிறது'' என்றவர் தொடர்ந்தார்.
உளவியல்ரீதியாகச் சொல்ல வேண்டுமென்றால், கணவன் மனைவி உறவுதான் எல்லா உறவுகளையும் காட்டிலும் மிக மிக நெருக்கமானது. இந்த உறவில் சிறிய விரிசல் ஏற்பட்டாலும், அது கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாவதற்கு வாய்ப்பிருக்கிறது.

திருமணத்துக்கு முன்னால், 'என்னுடைய எதிர்பார்ப்பு இவை; நீ இதற்கு ஏற்றபடி நடந்துகொள்வாயா?' என்று கேட்டுக் கொள்கிறார்கள். திருமணத்துக்கு முன்னால் இவையெல்லாம் ஒரு விஷயமாகவே தெரியாது. குறிப்பாக, காதல் திருமணங்களில். பெற்றோர் பார்த்து வைக்கிற திருமணங்களிலும், 'இதுதானா..? இந்த எதிர்பார்ப்பையெல்லாம் தாராளமா நிறைவேற்றலாம்' என்றே நினைக்கிறார்கள். சிலர், 'இப்போதைக்குப் பூர்த்தி செய்வோம். போகப்போக கன்வின்ஸ் செய்துவிடலாம்' என்று தன்னுடைய கோணத்தில் இருந்து அணுகுவார்கள். 'என்னுடைய எதிர்பார்ப்பையெல்லாம் உங்களால் நிறைவேற்ற முடியுமா' என்று கேட்பதற்கு முன்னால், 'உங்களுடைய எதிர்பார்ப்புகள் என்ன என்று கேட்டுப் பாருங்கள். இருவரும் பரஸ்பரம் எதிர்பார்ப்புகளை முடிந்தவரை நிறைவேற்றுங்கள்.
சிலருக்குப் பாசத்தை வெளிக்காட்டத் தெரியாது. சிலருக்குப் பாசத்தை வெளிக்காட்டுவதில் தயக்கம் இருக்கும். அழகான கிஃப்ட் வாங்கித் தரத் தெரியும் சிலருக்கு. சிலருக்கோ, 'இந்தா' என கிஃப்ட்டை டேபிள் மேல் வைத்துவிட்டுப் போக மட்டுமே தெரியும். ஒரு சிலருக்கு மட்டுமே, 'இந்த கிஃப்ட்டைப் பார்த்ததுமே உன் ஞாபகம் வந்துச்சு' என்று உணர்வுபூர்வமாக சொல்லத் தெரியும்.

ஏதோ ஒருவகையில், துணை அருகில் இருப்பது தனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அவருக்கு வார்த்தை, செயல்களால் உணர்த்த வேண்டும். உதாரணமாக, வெளியூருக்குச் சென்று வந்தால், 'மிஸ் யூ...' என்று சொல்வதுபோல. இங்கே பல தம்பதியர், திருமணமானவுடன் தன் துணையை 'டேக் இட் ஃபார் கிரான்ட்டட்' என்றே நடத்துகிறார்கள். 'நீ என் லைஃப் பார்ட்னர்தானே; நீ எங்க போயிடுவே; உன்னை எப்படி நடத்துறதுக்கும் எனக்கு உரிமையிருக்கு' என்கிற இந்தப் போக்கும் உறவில் சிக்கலை ஏற்படுத்திவிடும்.
தினமும் லவ் யூ சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதே நேரம், நீ என் வாழ்க்கைக்கு மிக மிக முக்கியம். என் வாழ்க்கையில் நீ அளித்து வருகிற பங்களிப்பை நான் மதிக்கிறேன்' என்பதை அவ்வப்போது ஏதாவது ஒரு வகையில் வெளிப்படுத்துங்கள். திருமண உறவில் பிரிவு வராது. இங்கே நான் சொல்லியிருப்பவை, திருமண பந்தம் பிரிவதற்கான பொதுவான காரணங்களும் தீர்வுகளும். இது தனி மனிதர்களைப் பொறுத்து மாறுபடும்'' என்று முடித்தார் உளவியல் நிபுணர் பிருந்தா ஜெயராமன்.