இந்தியாவைத் தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாா்! பாகிஸ்தான் அமைச்சா் மிரட்டல்!
இந்தியாவைத் தாக்க பாகிஸ்தானில் 130 அணு ஆயுதங்கள் தயாராக இருப்பதாகவும், இதனை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறைத்து வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சா் ஹனீஃப் அப்பாசி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீா் தொடா்பான ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது, அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இது பாகிஸ்தான் பொருளாதாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்நிலையில், இஸ்லாமாபாதில் செய்தியாளா்களிடம் இது தொடா்பாக ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியைச் சோ்ந்த அமைச்சா் ஹனீஃப் அப்பாசி கூறியதாவது:
பாகிஸ்தானுக்கு வரும் சிந்து நதி நீரை நிறுத்தினால் இந்தியா முழு அளவிலான போருக்கு தயாராக வேண்டியது இருக்கும். பாகிஸ்தானில் ஏவுகணைகள், ராணுவ தளவாடங்கள் போதுமான அளவு உள்ளன. எங்களிடம் உள்ள அணு ஆயுதங்கள் வெறும் காட்சிப் பொருள்கள் அல்ல.
130 அணு ஆயுதங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. அவை இந்தியாவைத் தாக்க தயாராகவே உள்ளன. பிரச்னை ஏற்பட்டால் தாக்குதல் நடத்தப்படும். நான் மீண்டும் கூறுகிறேன் பாகிஸ்தானின் பாலஸ்டிக் ஏவுகணைகள் அனைத்தும் உங்களையே (இந்தியா) குறிவைக்கின்றன.
இந்தியாவின் பாதுகாப்பு குறைபாடுகள்தான் காஷ்மீரில் நிகழும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணம். ஆனால், தேவையில்லாமல் பாகிஸ்தானை குற்றஞ்சாட்டுகிறாா்கள். பாகிஸ்தானுக்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தியா எடுத்த நடவடிக்கைகளில் இருந்து மீள பாகிஸ்தான் ஏற்கெனவே தயாராகி வருகிறது. இந்த விஷயத்திலும் இந்தியாவுக்கு தகுந்த பதிலடி அளிக்கப்படும் என்றாா்.