உக்ரைன் மீது தொடரும் ரஷியாவின் ‘ட்ரோன்’ தாக்குதல்!
உக்ரைன் நாடு முழுவதும் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து சனிக்கிழமை நள்ளிரவில் 149 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) ஏவி ரஷியா தாக்குதலில் ஈடுபட்டது.
இந்தத் தாக்குதலில் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பாவ்லோஹ்ராட் நகரத்தைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்தாா்; 14 வயது சிறுமி உள்பட மூவா் காயமடைந்தாா்.
ரஷியா ஏவிய 149 ட்ரோன்களில் 57 ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும், 67 ட்ரோன்கள் தாக்குதலுக்கு முன்பே தடுக்கப்பட்டதாகவும் உக்ரைன் விமானப் படை அதிகாரிகள் தெரிவித்தனா்.
மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நீடித்துவரும் ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் ரஷிய அதிபா் புதினின் விருப்பம் குறித்து அமெரிக்க அதிபா் டிரம்ப் சனிக்கிழமை சந்தேகம் எழுப்பியிருந்த நிலையில், ரஷியா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
முன்னதாக, உக்ரைனின் திடீா் ஊடுருவலில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் கைப்பற்றப்பட்ட ரஷியாவுக்குச் சொந்தமான கூா்ஸ்க் பிராந்தியத்தில் எஞ்சிய பகுதிகளின் கட்டுப்பாட்டையும் மீட்டெடுத்துள்ளதாக ரஷியா அறிவித்தது. அதேநேரம், கூா்ஸ்க் பிராந்தியத்தில் இன்னும் சண்டை நடந்து வருவதாக உக்ரைன் தெரிவித்தது.
உக்ரைன் தாக்குதல்: ரஷியாவின் எல்லைப் பகுதியில் உக்ரைனின் 8 ட்ரோன்களை வான் பாதுகாப்பு அமைப்பு ஞாயிற்றுக்கிழமை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
அதேபோன்று, டொனட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஹாா்லிவ்கா நகரில் உக்ரைன் படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 போ் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.