பெரியதாழையை தனி வருவாய் கிராமமாக தரம் உயா்த்தக் கோரி எம்.பி.யிடம் மனு
திமுக அமைச்சரவையில் தொடர்ந்து பந்தாடப்படும் வனத்துறை... என்னதான் பிரச்னை?
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் திண்டுக்கல் சீனிவாசன் வசம் இருந்த வனத்துறை, 2021 தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான ராமச்சந்திரனுக்கு வழங்கப்பட்டது. சிலகாலம் வனத்துறை அமைச்சராக ராமச்சந்திரன் நீடித்து வந்த நிலையில், கோத்தகிரி அருகில் உள்ள மேடநாடு பகுதியில் மருமகனுக்குச் சொந்தமான எஸ்டேட்டிற்கு வனத்தை அழித்து ரோடு போட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுக்க, வனத்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு சுற்றுலா அமைச்சராக நியமிக்கப்பட்டார். சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அதற்கு பிறகான அமைச்சரவை மாற்றத்தில் மதிவேந்தன் வசம் இருந்த வனத்துறை பொன்முடி வசம் ஒப்படைக்கப்பட்டது. பொன்முடியின் சர்ச்சை பேச்சைத் தொடர்ந்து தற்போது பொன்முடியிடம் இருந்தும் வனத்துறை பறிக்கப்பட்டு ராஜ கண்ணப்பன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வனவிலங்கு வேட்டை, காடழிப்பு போன்ற வனக்குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழும் இந்த காலகட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் வனத்துறை அமைச்சர் பதவி தொடர்ந்து பந்தாடப்படுவது சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.