அடுத்த 3 மணி நேரத்துக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
போரை நிறுத்தாத ரஷ்யா; உக்ரைனில் தொடரும் உயிர் பலிகள்! - என்ன நடந்தது?
'இதோ முடிந்துவிடும்', 'அதோ முடிந்துவிடும்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வந்த ரஷ்ய - உக்ரைன் போர், வெற்றிகரமான பேச்சுவார்த்தையை கூட இதுவரை எட்டவில்லை.
ரஷ்யா, உக்ரைன் மீதான தனது தாக்குதலை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. நேற்று இரவு ரஷ்யா உக்ரைன் மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.
இந்தத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்து உள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் எச்சரிக்கை
கடந்த வாரம் லண்டனில் நடந்த அமைதி பேச்சுவார்த்தைக்கு பின்னர், போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார் ட்ரம்ப்.
அந்த சமயத்தில், ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை நடத்த, அதில் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இதனால், கோபமடைந்த ட்ரம்ப் ரஷ்யாவையும் கடுமையாக சாடியிருந்தார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில், அமெரிக்கா பேச்சுவார்த்தை மத்தியஸ்த்தில் இருந்து விலகிவிடும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வானஸ் அப்போது எச்சரித்தார்.
ரஷ்யா மீது நடவடிக்கை
இந்த நிலையில் தான், ரஷ்யா இன்னமும் இறங்கி வர தயாராக இல்லை. இது ரஷ்யா உக்ரைன் மீது தொடரும் தாக்குதல்கள் மூலமே தெள்ள தெளிவாகின்றது.
போப்பின் இறுதி சடங்கில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடனான சந்திப்பிற்கு பின், போர் முடிவுக்கு வர இன்னும் காலம் ஆகும் என்று ட்ரம்ப் பேசியிருந்தார். ரஷ்யா மீது அமெரிக்கா கடும் நடவடிக்கைகளை கூட எடுக்கலாம் என்பது போலவும் பேசியிருந்தார்.
ஏப்ரல் 2-ம் தேதி அறிவிக்கப்பட்ட ட்ரம்பின் பரஸ்பர வரி பட்டியலில் ரஷ்யா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.