டி20 கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப்பின் முக்கியத்துவத்தை மறந்துவிடுகிறார்கள்: விரா...
இறப்புச் சான்றிதழின் அவசியம் என்ன? விண்ணப்பிப்பது எப்படி?
இறப்புச் சான்றிதழின் அவசியம், எவ்வாறு விண்ணப்பிப்பது, எங்கு விண்ணப்பிப்பது போன்ற தகவல்களை அறிய..
இறப்புச் சான்றிதழ் அவசியம்
இறப்புச் சான்றிதழ் என்பது ஒருவரின் இறப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் ஆவணமாகும். இறப்புச் சான்றிதழ் இல்லையெனில், இறந்தவரின் சொத்துகள், வங்கிக் கணக்குகள் உள்ளிட்டவற்றை அவர்களின் வாரிசுகளால் அணுக முடியாது.
மேலும், இறந்தவரின் வாழ்க்கைத் துணை அதிகாரப்பூர்வமாக மறுமணம் செய்வதற்கு, குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்குவதற்கு, காப்பீடுத் தொகை, ஓய்வூதியத் தொகை உள்ளிட்டவற்றை பெறுவதற்கு இறப்புச் சான்றிதழ் அவசியம்.
இறப்புச் சான்றிதழ் பெறுவது எப்படி?
சென்னை, கோவை போன்ற பெருநகரப் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒருவர் உயிரிழந்தால், மருத்துவமனை நிர்வாகமே இறந்தவரின் உறவினர்களிடம் தகவல்களைப் பெற்று இணையதளத்தில் பதிவிட்டு விண்ணப்பித்துவிடுவார்கள்.
பின்னர், சில நாள்களில் https://www.crstn.org/ என்ற வலைதளத்தில் தகவல்களை பதிவிட்டு இறப்புச் சான்றிதழை ஆன்லைன் மூலமே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
வீட்டில் ஒருவர் உயிரிழந்தால், அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கோ அல்லது அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த மருத்துவரிடமோ கொண்டுசென்று படிவம் 4ஏ பெறவேண்டும். படிவம் 4ஏ இருந்தால் மட்டுமே மின்மயானங்களில் தகனம் செய்வார்கள்.
படிவம் 4ஏ மற்றும் மின்மயானத்தில் தகனம் செய்ததற்கான ரசீதுடன், இறந்தவரின் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் உள்ளிட்டவற்றை இணைத்து, கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர், இறந்தவரின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு நேரில் வந்து விசாரணை செய்வார். பின்னர், வட்டாட்சியர் அலுவலகத்துக்கு இறப்புச் சான்றிதழின் விண்ணப்பம் அனுப்பப்படும். இதையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
சில நாள்களில் https://www.crstn.org/ என்ற வலைதளத்தில் இறப்புச் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
(இணையதளத்தில் இறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் வசதி இல்லாத மருத்துவமனைகளில் உயிரிழந்தால், மருத்துவமனையில் வழங்கப்படும் படிவம் 4-ஐ வைத்து விஏஓ அலுவலகத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்)
பல ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் பெறுவது எப்படி?
இறப்புச் சான்றிதழிலின் முக்கியத்துவம் தெரியாமல் பலரும் அலட்சியமாக இருப்பதுண்டு. பின்னர், தேவைப்படும் நேரத்தில் இறப்புச் சான்றிதழை பெற முயற்சிப்பார்கள்.
உயிரிழந்தவர்களுக்கு ஓராண்டுக்குள் இறப்புச் சான்றிதழை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரையே நாடி பெற்றுக் கொள்ளலாம். உயிரிழந்து ஓராண்டுக்கு மேல் 5 ஆண்டுகளுக்குள் இருந்தால் வட்டாட்சியரை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.
5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தவர்களுக்கு சான்றிதழ் பெற வேண்டுமானால் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் ஆண்டுக்கு ஏற்றவாறு தேடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
அவர்கள் இறப்பு குறித்த பதிவு இருந்தால், உடனடியாக சான்றிதழ் வழங்கப்படும், இல்லையெனில் பதிவில்லை என்ற சான்றிதழ் வழங்கப்படும். அதனை வைத்து வட்டாட்சியரிடமும் கிராம நிர்வாக அலுவலரிடமும் பதிவில்லை என்ற சான்றிதழ்களைப் பெற வேண்டும்.
இந்த மூன்று சான்றிதழ்களையும் இணைத்து வருவாய் நீதிமன்றத்தில் மனு அளிக்க வேண்டும். நீதிமன்றத்திலிருந்து சரிபார்ப்புக்காக வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு மனு அனுப்பப்படும். இந்த மனு சரிபார்க்கப்பட்டவுடன் நாளிதழில் ஆட்சேபணை விளம்பரம் அளிக்க வேண்டும்.
அதன்பிறகு நீதிமன்றத்தில் பெறும் உத்தரவை வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினால், இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.
இறப்புச் சான்றிதழுக்கான கட்டணம்
உயிரிழந்து 21 நாள்களுக்குள் இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு எவ்வித கட்டணம் வசூலிக்கப்படாது. 22 முதல் 30 நாள்களுக்குள் ரூ. 100 கட்டணமும், 31 நாள்கள் முதல் ஓராண்டுக்குள் ரூ. 200 கட்டணமும் வசூலிக்கப்படும்.
ஓராண்டுக்கு மேல் ரூ. 500-ம் காலதாமத கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும், ஒவ்வொரு ஆண்டுக்கும் தேடுதல் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும்.