இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கு கே.எல்.ராகுல்தான் எனது முதல் தெரிவு: கெவின் ...
ஸ்பெயின், போர்ச்சுகலில் மின் தடையால் இருளில் தவிக்கும் மக்கள்: ரயில், சாலை போக்குவரத்து பாதிப்பு!
ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் திங்கள்கிழமை(ஏப். 28) திடீரென மின் விநியோகம் தடைபட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் மேற்கு ஐரோப்பிய பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.
’தொழில்நுட்பக் கோளாறுகளால் மின் விநியோகம் தடைபட்டுள்ளதைத் தொடர்ந்து, மின் விநியோகத்தை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை மின் உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து எடுத்து வருவதாக’ ஸ்பெயினின் ‘ரெட் எலக்ட்ரிகா’ மின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறுகளால், ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸின் சில பகுதிகளில் திங்கள்கிழமை மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக போர்ச்சுகலை சேர்ந்த மின்சார விநியோக கண்காணிப்பு நிறுவனமான ’இ-ரெடீஸ்’ தெரிவித்திருக்கிறது.
ஸ்பெயில் தலைநகர் மேட்ரிட், போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பன் உள்பட பல்வேறு நகரங்களிலும் மின் தடையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன. இதனால் போர்ச்சுகலில் லிஸ்பன், போர்ட்டோ நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
சாலைப் போக்குவரத்து சிக்னல்கள் செயல்படாததால் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் மின் தடையால் விமான சேவை பாதிக்கப்படாமலிருக்க ஜெனரேட்டர்கள் உதவியுடன் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் மின் தடையால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினின் தேசிய ரயில்வே நிறுவனமான ’ரென்ஃபே’ வெளியிட்டுள்ள தகவலின்படி, உள்ளூர் நேரப்படி பகல் 12.30 மணியளவில் ஸ்பெயினில் ஒட்டுமொத்தமாக மின் விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்களின் புறப்பாடு நிறுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வரும் நிலையில், மின் தடையால் டென்னிஸ் போட்டியும் நிறுத்தப்பட்டுள்ளது.
மின் தடையால் பல பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகளும் முடங்கியுள்ளன. ஃபோன் அழைப்புகளை மேற்கொள்ள முடியாததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தகவல் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டாலும், சமூக வலைதளங்கள் சில செயல்படுவதால் அவற்றின் மூலம் மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை தொடர்புகொண்டு பேசி வருகின்றனர்.