ராஜபதி கைலாசநாத சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா 30இல் தொடக்கம்
காப்பீடு ஏன் அவசியம்? எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?
வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நவீன, பரபரப்பான உலகில், ஒருவர் பல்வேறு காப்பீடுகளை எடுக்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது. அவசரத்துக்கு காப்பீடு கைகொடுக்குமோ கொடுக்காதோ ஆனால், காப்பீடு வைத்திருக்கிறோம், அது நம்மைக் காக்கும் என்ற நம்பிக்கை நிச்சயம் நமக்கு ஒரு சிறு நிம்மதியைக் கொடுக்கும்.
காப்பீடு என்றால்..
ஒரு தனிநபர், காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து ஆண்டுச் சந்தா அல்லது மாதந்தோறும் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை என ஏதேனும் ஒரு முறையில் ப்ரீமியம் தொகையைச தவணையாகச் செலுத்தி பரஸ்பர ஒப்பந்தத்துடன் காப்பீடு எடுப்பதை குறிக்கிறது. ஒரு வாடிக்கையாளர் செலுத்தும் தவணைத் தொகைக்கு ஏற்ப, காப்பீடு நிறுவனம், பாலிசிதாரருக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பு அல்லது ஆபத்திலிருந்தும் பணப் பாதுகாப்பை வழங்கும். இந்தக் காப்பீடு என்பது ஒவ்வொரு காலக்கட்டத்துக்கு மட்டுமே எடுக்கக்கூடியது. அந்தக்காலம் முடிந்ததும் மீண்டும் ப்ரீமியம் தொகையை செலுத்தி காப்பீட்டை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
இந்தக் காப்பீடுகளை முன்பு, தனிநபர்கள் அல்லது குடும்பத்தினர் எடுத்துக் கொண்டனர். இப்போது பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைப் பாதுகாக்க காப்பீட்டு வசதியை வழங்கி வருகிறது. இது பொருளாதார ரீதியாகப் பார்த்தால் இடர் மேலாண்மைத் திட்டம்.
காப்பீடு எடுத்திருப்பவர், காப்பீடு செய்யப்பட்ட நபரின் மரணம், நோய் பாதிப்பு, உடைமைகளுக்கு ஏற்படும் இழப்பு போன்ற விபத்துகளின்போது அதனால் ஏற்படும் பண இழப்பை ஈடுகட்டிக் கொள்ளலாம்.
ஒருவருக்கு ஏற்படும் திடீர் நிதி அபாயங்களிலிருந்து காத்துக் கொள்ளவே காப்பீடு உதவுகிறது.
நம் நாட்டில் வழங்கப்படும் காப்பீட்டு வகைகள்
இந்தியாவில் பல்வேறு வகையான காப்பீடுகள் கிடைக்கின்றன. முக்கிய வகைகளாவன..
ஆயுள் காப்பீடு
இது ஒரு தனிநபருக்கும் காப்பீட்டு நிறுவனத்துக்கும் இடையிலான ஒரு பரஸ்பரம் எடுக்கப்படும் காப்பீடு. இதில் ஒருவர் காப்பீட்டு நிறுவனத்திற்கு மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட தொகையை பிரீமியமாக செலுத்துவார். காப்பீட்டு நிறுவனம், அவருக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், சொத்துக்கும் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் போன்ற எதிர்கால நிகழ்வுகளால் ஏற்படும் பண நஷ்டத்திலிருந்து பாதுகாக்கும்.
ஒருவர், தனது வாழ்நாளில் சந்திக்கும் பல்வேறு இடர்களின்போது நிதித் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தனியார் மற்றும் பொது காப்பீட்டு நிறுவனங்கள், இந்த ஆயுள் காப்பீட்டை பல வகைகளில் வழங்கி வருகின்றன. இதில் பல பணப்பலன்கள் உள்ளன. இறப்புக்கு இழப்பீடு, முதிர்வுகாலம் முடிந்ததும் பணம் வட்டியுடன் வழங்கும் திட்டம், செலுத்தும் ப்ரீமியம் தொகைக்கான வரி சலுகைகள் போன்ற பல நன்மைகளுடன் வருகின்றன.
மருத்துவக் காப்பீடு
நம் நாட்டில் அதிகமானோர் எடுக்கும் மற்றொரு முக்கிய காப்பீடு மருத்துவக் காப்பீடு. நோய் அல்லது விபத்து, மருத்துவமனையில் சிகிச்சை, அறுவை சிகிச்சைகள், மருத்துவர்களின் ஆலோசனை, நோயறிதல் சோதனைகள், ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவமனை தங்குமிடம், மருத்துவக் கட்டணங்கள் போன்றவற்றால் மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது ஏற்படும் மருத்துவ செலவுகளிலிருந்து ஒருவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இது அவசியம்.
இந்த மருத்துவக் காப்பீட்டைப் பெற காப்பீடு நிறுவனத்திடம் தனிநபர் தனக்கு அல்லது தனது குடும்பத்தினருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை பிரீமியமாக செலுத்தி மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சில மருத்துவக் காப்பீடுகள் மருத்துவ பரிசோதனைகளுக்கும் பணம் செலுத்துகின்றன.
வாகனக் காப்பீடு
இந்தியாவில் ஒருவர் இரு சக்கர வாகனமோ அல்லது புதிய கார் அல்லது வேறு ஏதேனும் வாகனத்தை வாங்கும்போது, ஒரு சிறந்த காப்பீட்டு திட்டத்தையும் சேர்த்துத்தான் வாங்க வேண்டும். அப்போதுதான் அந்த வாகனத்தை வாங்கும் பணியானது முழுமையடையும்.
இந்த வாகனக் காப்பீடு எடுக்கும்போது, வாகனம் துரதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்கும்போது அல்லது தொலைந்து போனால் ஏற்படும் நிதிச் சுமையிலிருந்து காப்பீட்டு நிறுவனம் காப்பாற்றும்.
பொதுவாக வாகனக் காப்பீடுகள் எடுக்கும்போது, அனைத்து வகையான விபத்துகளிலிருந்தும் நிதியுதவி பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வீடுகளுக்கான காப்பீடு
ஒருவரின் வாழ்நாள் சொத்தாக இருக்கும் வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் வீட்டுக் காப்பீடு. பலரும் மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு எடுப்பார்கள். ஆனால், வீடுகளுக்கான காப்பீடு எடுக்க தவறி விடுவார்கள். ஆனால், வீட்டுக் காப்பீட்டுக் கொள்கைகள் ஒரு முக்கியமான முதலீடு என்றே பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள்.
ஒருவரது வீடு அல்லது அதில் இருக்கும் உடைமைகளுக்கு ஏற்படும் சேதங்களினால் அடையும் நிதி இழப்புகளுக்கு எதிராக பாதுகாப்பைப் பெற, ஒரு நல்ல வீட்டுக் காப்பீட்டுத் திட்டம் அவசியம். எனவே, ஒவ்வொரு வீட்டு உரிமையாளருக்கும் வீட்டு காப்பீடுதான் சிறந்த நண்பன். அனைத்து காப்பீட்டு நிறுவனங்களுமே இந்த காப்பீட்டை வழங்குகின்றன. மிக எளிதாக ஆன்லைன் மூலமாகவே இந்த காப்பீட்டை எடுத்து விட முடியும்.
பயணக் காப்பீடு
பயணம் என்பது மனிதகுலத்தின் மிகப்பெரிய கேளிக்கைகளில் ஒன்று. இந்தப் பயணத்துக்கு எதுக்கு காப்பீடு என்று கேட்பவர்களுக்கு உண்மையில் பயணங்களின் போது ஏற்படும் ஆபத்துகள் பற்றி உணராதவர்களாக இருப்பார்கள்.
ஒரு சிறந்த பயணக் காப்பீடு எடுத்தவர்கள், பயணத்தின்போது ஏறப்டும் பொருள் இழப்பு, பாஸ்போர்ட் காணாமல் போவது அல்லது திருடப்படுவது, பயணம் ரத்து செய்யப்படுவதால் ஏற்படும் இழப்பு, பயணத்தின்போது ஏற்படும் பெரிய மருத்துவ பிரச்சினைகள் மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது எதிர்பாராத ஆபத்துகளை சந்திக்க நேரிட்டால், அதனால் ஏற்படும் நிதிச் சுமையலிருந்து ஒரு முழுமையான பாதுகாப்பை வழங்கும்.
ஏன் காப்பீடு எடுக்க வேண்டும்?
வாழ்க்கையில் காப்பீடு எடுத்துவைத்துக் கொள்ள பல காரணங்கள் உள்ளன. வாழ்க்கை நிச்சயமற்ற எதிர்பாராத விபத்துகளைக் கொண்டிருக்கும் என்பதால், ஒருவர் தன்னையும் தன் குடும்பத்தையும் அனைத்து ஆபத்துகளிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள காப்பீடு எடுத்துக் கொள்வது முக்கியம்.
காப்பீடுத் திட்டம் மூலம் ஒருவர் நிதிப் பாதுகாப்பை மட்டுமல்ல, எதிர்கால ஆபத்துகள் தொடர்பான ஆச்ச உணர்விலிருந்து மன அமைதியையும் வழங்குகிறது. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு காப்பீடு மிகவும் முக்கியமானது.
தேர்வு செய்வதுதான் முக்கியம்
சந்தையில் ஏராளமான காப்பீட்டுத் திட்டங்கள் இருப்பதால் ஒருவர தனக்குச் சிறந்த காப்பீட்டுத் திட்டத்தை கவனமாகத் தேர்வு செய்ய வேண்டியதுதான் அவசியம்
ஒரு காப்பீடுத் திட்டத்தைத் தேர்வு செய்வதற்கு முன்பு, ஏன் காப்பீடு எடுப்பதன் தேவை?, எவ்வளவு தொகை தேவைப்படலாம்? குறிப்பிட்டக் காலத் திட்டத்துக்கு போதுமா? முழு ஆயுள் திட்டம் வேண்டுமா? என்ற அனைத்துக்கும் சரியான பதிலாக எந்த காப்பீடு இருக்கிறதோ அதை தெரிவு செய்யலாம்.