57 டன் தங்கத்தை வாங்கிக் குவித்த ஆா்பிஐ: 7 ஆண்டுகளில் இல்லாத அளவு கொள்முதல்
ஆர்டிஐ சட்டத்தின் கீழ் விளக்கம் பெறுவது எப்படி?
மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்களை, துறைவாரியான நடவடிக்கைகள் என நாட்டின் குடிமக்கள் அறிந்துகொள்ள உரிமை பெற்ற தகவல்களை யார் வேண்டுமானாலும் கேட்டு அறிந்துகொள்ள வழி வகை செய்வதே தகவல் அறியும் உரிமைச் சட்டம்.
இந்தச் சட்டத்தின் கீழ், பதிவு செய்த குடிமக்கள், மத்திய, மாநில அரசுத் துறைகளுக்கு ஆன்லைன் மூலமே கேள்வி எழுப்பி தகவல்களைப் பெற முடியும்.
1. ஆர்டிஐ தகவல்களைப் பெற ஏற்படுத்தப்பட்ட https://rtionline.gov.in/ இணையதளத்துக்குள் செல்லவும்.
2. முதல் முறையாக இணையதளத்துக்கு செல்பவராக இருந்தால், உங்கள் அடையாளத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
3. பெயர், முகவரி, தொடர்பு எண் மற்றும் சில விவரங்களை உள்ளீட்டு உங்களுக்கான கணக்கைத் தொடங்கலாம்.
4. பிறகு, நீங்கள் எழுப்ப வேண்டிய கேள்வி யாருக்கு என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
5. அமைச்சகமா? துறையா? நீதிமன்றம் போன்றவையா என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
6. பிறகு, ஆன்லைன் ஆர்டிஐ விண்ணப்பத்தில் நீங்கள் கேட்கும் கேள்வியை பதிவு செய்யவும்.
7. எந்த விவரத்தைக் கேட்கிறோம் என்பதை தெளிவாக உள்ளிடுவது மிகவும் அவசியம்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பும்போது, 3000 எழுத்துகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் எழுத்துகளும் எண்கள், சிறப்பு எழுத்துகளான - _ ( ) / @ : & \ % போன்றவை மட்டுமே இடம்பெறலாம்.
8. சில கேள்விகளுக்கு ஆவணங்கள் ஏதேனும் இருப்பின் அதனையும் இணைக்கலாம்.
9. வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவராக இருந்தால் ஆர்டிஐ கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
10. வறுமைக் கோட்டுக்கு மேல் இருப்பவர்கள் ஆர்டிஐ கட்டணம் செலுத்த வேண்டும்.
அதற்கு மேக் பேமென்ட் என்பதைத் தேர்வு செய்து ஆன்லைன் மூலமாகவே பணம் செலுத்தலாம். இன்டர்நெட் பேங்கிங், கிரடிட் அல்லது டெபிட் கார்டு மூலமும் யுபிஐ மூலமும் பணம் செலுத்தலாம்.
பணம் செலுத்தியது உறுதியானதும், விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதும் உங்களது கேள்விக்கான பதிவு எண் உங்களுக்கு வழங்கப்படும். இது தொடர்பான உறுதிப்படுத்துதல் தகவல் மின்னஞ்சல் முகவரிக்கும், செல்போனில் குறுந்தகவலாகவும் வந்துவிடும்.
இந்த பதிவு எண்ணைக் கொண்டு, உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறியலாம்.
ஆர்டிஐ விண்ணப்பத்தில் கொடுக்கப்படும் தொலைபேசி எண்ணுக்கு, பதில் கிடைப்பது குறித்த குறுந்தகவலும் அனுப்பிவைக்கப்படும்.
இதில், பல வகை உண்டு. அதாவது, ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்வி அவருக்கு திருப்பி அனுப்பிவைக்கப்படும். ஏன் திருப்பி அனுப்பப்படுகிறது என்பதற்கான விளக்கம் கொடுக்கப்படும்.
அல்லது வேறொரு துறைக்கு அல்லது அமைச்சகத்துக்கு இந்த தகவல் அனுப்பிவைக்கப்படுவதாக இருந்தாலும் அது தொடர்பான தகவல் கிடைக்கப்பெறும்.
அவ்வாறு இல்லாமல், ஒருவர் கேட்ட கேள்வி, பல துறைகளிடமிருந்து பதில் பெறுவதாக இருந்தால், பல்வேறு துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது என்பதற்கான தகவல் வழங்கப்படும். இப்படிப்பட்ட விண்ணப்பங்கள் ஒருவேளை இரண்டு அல்லது மூன்று துறைகளுக்கு அனுப்பப்படுகிறது என்றால், மூன்று விண்ணப்ப எண்கள் வழங்கப்படும்.
இந்த துறைகளிடமிருந்து வரும் பதிலில், ஒரு துறையின் பதில் திருப்திகரமானதாக இல்லை என்றால், அந்த விண்ணப்பத்தின் எண்ணைக் குறிப்பிட்டு விண்ணப்பதாரர் மீண்டும் கேள்வி எழுப்பலாம்.
உங்களுக்குத் தேவையான மேலதிகத் தகவல்களை அறிந்துகொள்ள மேற்கண்ட கோப்பைப் பார்க்கலாம்.