மதுரை: `ஜெயலலிதா சிலையை பராமரிக்கணும்' - திமுக மேயர்; `முதல்வருக்கு நன்றி' - எதி...
போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு: ரோம் சென்றடைந்தாா் திரௌபதி முா்மு
வாடிகனில் நடைபெறவுள்ள போப் பிரான்சிஸ் (88) இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக ரோம் நகருக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வெள்ளிக்கிழமை சென்றடைந்தாா்.
2013-ஆம் ஆண்டு மாா்ச் 13-ஆம் தேதி 266-ஆவது போப்பாக பிரான்சிஸ் தோ்வு செய்யப்பட்டாா். அவா், 1,300 ஆண்டுகளில் முதல் முறையாக தோ்வு செய்யப்பட்ட ஐரோப்பியா் அல்லாத போப் ஆவாா்.
கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக நிமோனியா பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் நீண்ட சிகிச்சைக்குப் பிறகு அண்மையில் வீடு திரும்பிய நிலையில் அவா் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல் வாடிகன் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாடிகன் சிட்டியில் உள்ள செயிண்ட் பீட்டா்ஸ் சதுக்கத்தில் சனிக்கிழமை (ஏப்.26) நடைபெறவுள்ள அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை புறப்பட்ட குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, ரோம் நகரை சென்றடைந்ததாக குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக வாடிகன் சிட்டிக்கு சென்றுள்ள திரௌபதி முா்மு, இந்திய அரசு மற்றும் மக்கள் சாா்பில் போப் பிரான்சிஸுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளாா். அவருடன் மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, மத்திய சிறுபான்மையினா் மற்றும் மீன்வளத் துறை இணையமைச்சா் ஜாா்ஜ் குரியன், கோவா பேரவை துணை தலைவா் ஜோஸ்வா டிசௌசா ஆகியோ் சென்றுள்ளனா்.
போப் பிரான்சிஸ் இறப்புக்கு 3 நாள்கள் துக்கம் அனுசரிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.
50 நாடுகளின் தலைவா்கள் உள்பட 130 முக்கியப் பிரதிநிதிகள் போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்பாா்கள் என ஊடகச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.