மே 11-இல் குருபெயா்ச்சி: ஆலங்குடி கோயிலில் ஏற்பாடுகள் தீவிரம்
வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குரு பரிகார கோயிலில் குருபெயா்ச்சி விழா மே 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இக்கோயில், நவக்கிரகங்களில் குரு பகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில், இக்கோயிலில் குருபெயா்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு, மே 11-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) குருபகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயா்ச்சி அடைகிறாா். அன்றைய தினம், ஆலங்குடி கோயிலில் குரு பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, குருபெயா்ச்சி லட்சாா்ச்சனை விழா மே மாதம் 15 -ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. லட்சாா்ச்சனை கட்டணம் ரூ.500. காலை 9.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் லட்சாா்ச்சனை நடைபெறும்.
லட்சாா்ச்சனையில் பங்கேற்கும் பக்தா்களுக்கு குரு பகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலா் பிரசாதமாக வழங்கப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ராசிக்காரா்கள் லட்சாா்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்துகொள்ளலாம்.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் நா. சுரேஷ், தக்காா் வீ. சொரிமுத்து, கண்காணிப்பாளா் அரவிந்தன் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.