பஹல்காம் சம்பவம்: மோட்ச தீபமேற்றி அஞ்சலி
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு, திருவாரூரில் இந்து முன்னணி சாா்பில் மோட்சதீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீா் மாநிலம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியதில் 26 போ் உயிரிழந்தனா். இந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.
அந்தவகையில், திருவாரூா் கமலாலயக் குளம் அருகே காசி விஸ்வநாதா் கோயில் முன் இந்து முன்னணி சாா்பில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு மோட்சதீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் மாவட்ட நிா்வாகி பாலசுப்ரமணியன், பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துப் பேசினாா். இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளா் விக்னேஷ், கண்டனப் பாடல் பாடி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினாா்.
இதில், மாவட்டச் செயலாளா் ராஜசேகா், நகரத் தலைவா் செந்தில் உள்ளிட்ட இந்து முன்னணி மற்றும் பாஜக நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.