Jammu kashmir: `சிந்து நதிநீர் ஒப்பந்தம் ஓர் நியாயமற்ற ஆவணம்’ - ஒமர் அப்துல்லா காட்டம்
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் 26 இந்தியர்கள் கொல்லப்பட்ட கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு, 1960-ம் ஆண்டு போடப்பட்ட இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையிலான சிந்து நதிநீர் ஒப்பத்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு முடிவு செய்தது. அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இல்லத்தில் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

அதே நேரம் ஜம்மு காஷ்மீரிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், பல்வேறு சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்புகளுடன் நேற்று ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சந்தித்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், `` இந்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஜம்மு - காஷ்மீரைப் பொறுத்தவரை, அனைத்து நடவடிக்கைகளும் நேர்மையாக இருக்கட்டும்.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒருபோதும் ஆதரவாக இருந்ததில்லை. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மிகவும் நியாயமற்ற ஆவணம் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். ஆனால், இப்போது மத்திய அரசு எடுத்திருக்கும் இந்த முடிவால் ஏற்படவிருக்கும் நீண்ட கால தாக்கங்கள் என்ன என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.