Bihar : அப்செட்டில் நிதிஷ்; வேகமெடுக்கும் தேஜஸ்வி - பரபர பீகார் தேர்தல்!
பீகார் மாநிலத்தில் 243 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன. இங்கு 13 கோடிக்கு அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். 8 கோடி வாக்காளர்கள் இருப்பதாகத் தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் சொல்கிறது. இங்குதான் இந்த ஆண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அதில் தனது முதல்வர் நாற்காலியைத் தக்கவைத்துக்கொள்ள நிதீஷ் குமார் காய் நகர்த்தி வருகிறார். மறுபக்கம் விட்டதைப் பிடிக்க இந்தியா கூட்டணி தீவிரம் காட்டுகிறது.
இதில் பீகாரில் தேர்தல் களம் யாருக்குச் சாதகமாக இருக்கிறது.. அந்த மாநில அரசியலில் என்னதான் நடக்கிறது?

அப்செட்டில் நிதிஷ்
இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள், "கடந்த 2005-ம் ஆண்டு முதல் பீகார் முதல்வராக நிதிஷ் இருக்கிறார். ஆனால் இந்த முறை தேர்தல் களம் அவருக்குச் சாதகமாக இல்லை என்பதாகவே தெரிகிறது. இதற்கு நிலையற்ற கூட்டணி, மாநிலத்தில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, பா.ஜ.க-வுடனான கூட்டணியால் சிறுபான்மை சமூக மக்களிடத்தில் உயர்ந்து வரும் அதிருப்தி போன்றவைதான் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.
இது சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளில் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. இதனால் அப்செட்டில் இருக்கிறார் நிதிஷ். அதாவது சி-வோட்டர் நிறுவனம் பீகாரில் முதல்வராக வருவதற்கு யாருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என சர்வே ஒன்றை நடத்தியது. அதில் நிதிஷுக்கு வெறும் 18% மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானதிலிருந்தே இந்த முறை எப்படியும் நிதிஷ் மண்ணை கவ்வுவார் என்றே கருத்தே பீகார் அரசியலில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

இதையறிந்துகொண்ட பா.ஜ.க முன்கூட்டியே பிரசாரத்தை தீவிரப்படுத்தியிருக்கிறது. அதாவது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவின் ஆதரவுதான் மோடி மீண்டும் பிரதமர் நாற்காலியில் அமர்வதற்கு வழிவகை செய்து கொடுத்தது. இதனால் பீகாரில் மீண்டும் நிதிஷை முதல்வர் நாற்காலியில் அமரவைப்பதில் பா.ஜ.க தீவிரமாக வேலை செய்து வருகிறது.
இதைக் கருத்தில் கொண்டுதான் 2025-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில், ஐ.ஐ.டி விரிவாக்கம், உணவு பதப்படுத்துதல் தேசிய நிறுவனம், மேற்கு கோசி கால்வாய் திட்டத்திற்கு நிதி உதவி, கிரீஃன்பீல்ட் விமான நிலையம், மக்கானா வாரியம் என எக்கச்சக்க திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. தற்போது இதையெல்லாம் காட்டி தீவிரமாக பா.ஜ.க பிரசாரம் செய்து வருகிறது. தே.ஜ கூட்டணிக்கு வாக்களித்தால் பீகாரை வளர்ச்சியின் உச்சத்துக்கு அழைத்துச்செல்வோம் எனச் சொல்லி வருகிறார்கள்.

மறுபக்கம் இந்தியா கூட்டணியைப் பொறுத்தவரையில் ராஷ்டிய ஜனதாதளத்தின் இளம் தலைவரான தேஜஸ்விமீது மக்கள் மத்தியில் மதிப்பு அதிகரித்துக்கிறது. சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளில்கூட அவர் முதல்வராக வர வேண்டும் என 41% மக்கள் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். இளைஞர்களை தன் பக்கம் கொண்டுவரும் வரையில் முக்கிய இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார், தேஷஸ்வி. அதில் அதிக அளவில் கூட்டம் சேர்க்கிறது. இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான திட்டங்களில் கவனம் செலுத்துவேன் என அவர் அளித்திருக்கும் வாக்குறுதி மக்களிடத்தில் பெரும் வரவேற்பைக் கொடுத்திருக்கிறது.
இருந்தாலும், இங்கும் சிக்கல் இல்லாமல் இல்லை. காரணம், தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் இந்தியா கூட்டணிக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் அந்த மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் தேசிய மாணவரணிப் பொறுப்பாளர் கண்ணையா குமாருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. அவர் ஆளும்கட்சிக்கு எதிராக யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

அதில் ஆளும்கட்சியின் ஊழல், காங்கிரஸ் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாகப் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து அவர் முன்வைக்கும் கருத்துக்கள் மக்கள் மத்தியில் நன்றாக வேலை செய்கிறது. இதெல்லாம் இந்தியா கூட்டணிக்குப் பலமாக இருக்கிறது. ஆனால் இந்தியா கூட்டணிக்குள் ஈகோ மோதல்களும் அதிகமாக இருக்கிறது. அதையெல்லாம் சரிசெய்தால் மட்டுமே வெற்றிபெற முடியும்" என்றனர்.