ஜிடிஏ 6: வெளியீடு எப்போது? கேமிங் பிரியர்களுக்கு விருந்து!
இந்தாண்டு வெளியிடுப்படுவதாக இருந்த ஜிடிஏ 6-இன் வெளியீடு தள்ளிப் போகலாம் என்று கூறப்படுகிறது.
1960 காலகட்டத்தில் ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் ஜிடிஏ லண்டன் (Grand Theft Auto London) கேமர்களின் மத்தியில் பெரும் புரட்சியைச் செய்தது எனலாம். அடுத்தடுத்து வெளியான ஜிடிஏ 1,2 பதிப்புகளும் பரவலாக ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கின.
இதனைத் தொடர்ந்து, வெளியான வைஸ் சிட்டி, சான் ஆன்ட்ரியாஸ் பதிப்புகள் இந்தியாவில் தனிராஜ்ஜியத்தை அமைத்தன. தொடர்ந்து, ஜிடிஏ 4,5 பதிப்புகளும் வெளியாகின. இதனை விளையாடுவதற்காகவே ப்ளே ஸ்டேஷன் வாங்குபவர்களும் உருவாகினர்.
2013-ல் வெளியான ஜிடிஏ 5, கேமிங் அனுபவத்தில் உச்சத்தைக் கொண்டு வந்தது எனலாம். அதன் அடுத்த பதிப்பான ஜிடிஏ 6-இல் 100 மடங்கு அளவில் கேமிங் அனுபவம் இருக்கும் என்றும் கூறினர்.
இந்த நிலையில்தான், ஜிடிஏ 6 வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியானது. 2026-ல்தான் ஜிடிஏ 6 வெளியாகும் என்று நிறுவனத்தின் தரப்பில் முன்னரே கூறினர். இருப்பினும், ஜிடிஏ ரசிகர் பட்டாளம், ஒவ்வொரு வருடப்பிறப்பிலும் நம்பிக்கை தெரிவித்து வந்தனர். 2024-ல் வெளியான ஜிடிஏ 6-இன் டிரைலர், மென்மேலும் ஆர்வத்தை கூட்டியது என்பதைவிட வெறியாக்கியது எனலாம்.
வெளியீட்டு ஆண்டு முன்னரே அறிவிக்கப்பட்டாலும், அதனை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள், ஜிடிஏ 6-இன் வெளியீட்டை ஒரு மீம் மெட்டீரியலாகவே மாற்றி விட்டனர்.
90-களில் பிறந்தவர்களுக்கு திருமணம்கூட ஆகிவிடும்போல; இந்த ஜிடிஏ 6 மட்டும் வந்தபாடில்லை என்று ஒருதரப்பினரும், ராகுல் காந்திகூட பிரதமராகி விடுவார்போல ஜிடிஏ 6 மட்டும் வெளியாகாதுபோல என்றும் மாறிமாறி நாள்தோறும் மீம்களை உருவாக்கி, ஆதங்கத்தைப் பகிர்கின்றனர்.

ஒருவழியாக 2025 ஆண்டு தொடங்கியதும், கேமிங் பிரியர்கள் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்து விட்டனர். இந்தாண்டில் கேமிங் பிரியர்களுக்கு தடபுடலான விருந்தும், இத்தனை ஆண்டுகளுக்கான மருந்தும் கிடைக்கவுள்ளதாக கருத்துகளைப் பரிமாறி வந்தனர்.
இதனிடையே, பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த ஜிடிஏ 5 வெளியான செப்டம்பர் மாதத்திலேயே, ஜிடிஏ 6 வெளியாகலாம் என்று எதிர்பார்ப்பு கிளம்பியது. மேலும், இதன் விலை 100 டாலர் (ரூ. 8500) வரையில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், அதிகாரபூர்வத் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
அதுமட்டுமின்றி, ஜிடிஏ 6 குறித்து நிறுவனத்தின் தகவல்கள் எதுவும் வராதிருப்பதால், 2026 ஆம் ஆண்டுக்கு தள்ளிப் போகலாம் என்ற கருத்துகளும் வலம் வருவதால், ஒருபுறம் கேமிங் பிரியர்கள் அச்சத்துடனேயே இருந்து வருகின்றனர்.