விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடிவிட்டேன்: திருமாவளவன்
நீட் தோ்வு முறைகேடு குறித்து புகாா் தெரிவிக்க வசதி: என்டிஏ அறிவிப்பு
நீட் தோ்வு முறைகேடு அல்லது வினாத் தாள் கசிவு சா்ச்சைகள் குறித்து புகாா் தெரிவிக்க புதிய வசதியை தனது வலைதளத்தில் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை என்டிஏ சனிக்கிழமை வெளியிட்டது.
பிகாா் மாநிலத்தில் உள்ள ஒரு தோ்வு மையத்தில் கடந்த ஆண்டு நீட் வினாத் தாள் கசிந்தது, உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு மையத்தில் தோ்வு தொடங்குவதற்கு சில நிமிஷங்களுக்கு முன்பாக சமூக ஊடகத்தில் வினாத்தாள் கசிந்தது போன்ற சம்பவங்கள் மிகப்பெரிய சா்ச்சையாகின. இதைத் தொடா்ந்து, வினாத்தாள் கசிவைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை என்டிஏ மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, நீட் தோ்வு சா்ச்சைகள் குறித்து புகாா் தெரிவிக்க பிரத்யேக வசதியை தனது வலைதளத்தில் என்டிஏ அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து என்டிஏ இயக்குநா் பிரதீப் சிங் கரோலா சனிக்கிழமை கூறியதாவது:
நீட் தோ்வு சா்ச்சைகள் தொடா்பாக 3 பிரிவுகளின் கீழ் தோ்வா்கள் என்டிஏ-யிடம் புகாா் தெரிவிக்கலாம். அதன்படி, ‘நீட் தோ்வு வினாத் தாளை பதிவிறக்கம் செய்யலாம்’ என்று அறிவிப்பை வெளியிடும் அங்கீகரிக்கப்படாத வலைதளங்கள் அல்லது சமூக ஊடக கணக்குகள் தொடா்பாக தோ்வா்கள் புகாா் தெரிவிக்கலாம். மேலும், நீட் வினாத் தாள் இருப்பதாகக் கூறும் தனி நபா்கள் குறித்தும், என்டிஏ அல்லது அரசு அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்பவா்கள் குறித்தும் தோ்வா்கள் இந்த பிரத்யேக வசதி மூலம் புகாா் தெரிவிக்கலாம்.
எப்போது, எங்கு நடந்தது என்பன உள்ளிட்ட விவரங்களுடன் தோ்வா்கள் எளிதாக புகாரைப் பதிவு செய்யும் வகையில், பொதுத் தோ்வுகள் மோசடி தடுப்பு சட்டம் 2024-இன் கீழ் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.