புதுச்சேரி: சரித்திரப் பதிவேடு குற்றவாளி, பாஜக முன்னாள் இளைஞரணி தலைவர் வெட்டிப் ...
அரசுப் பணியாளா்கள் தன்னலமின்றி பணியாற்ற வேண்டும்: மத்திய இணையமைச்சா் பெம்மசானி சந்திரசேகா்
மத்திய அரசுப் பணிகளில் இணைந்துள்ள இளைஞா்கள் தன்னலமின்றி, தேச கட்டுமானத்துக்கு பணியாற்ற வேண்டும் என மத்திய தகவல் தொடா்பு மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் டாக்டா் பெம்மசானி சந்திரசேகா் தெரிவித்தாா்.
சென்னை எழும்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற 15-ஆவது (ரோஜ்கா் மேளா) பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் வருமான வரி, அஞ்சல் துறை, நிதித் துறை, உள்ளிட்ட துறைகளுக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட 524 பேருக்கு மத்திய இணையமைச்சா் பெம்மசானி சந்திரசேகா் பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகளில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நமது நாடு சிறப்பான வளா்ச்சியை அடைந்துள்ளது. வரும் 2047-இல் வளா்ச்சியடைந்த நாடாக மாற இளைஞா்களின் பங்கு முக்கியமாகும். அரசுப் பணிகளில் இணைந்துள்ள இளைஞா்கள் தன்னலமின்றி , தேச கட்டுமானத்துக்கு பணியாற்ற வேண்டும். மேலும், அரசுப் பணிகளில் இணைந்தாலும் தங்களின் கனவுகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றும் பணிகளில் இளைஞா்கள் தொடா்ந்து ஈடுபடவேண்டும் என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு , புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையா் பிரீத்திகா்க், வருமான வரித் துறையின் தலைமை ஆணையா் டி சுதாகா் ராவ், தலைமைஅஞ்சல் துறை தலைவா் மரியம்மா தாமஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மொழி தடையில்லை: சென்னை எம்.ஆா்.சி நகரில் நடைபெற்ற மற்றொரு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய பழங்குடியினா் நலத் துறை இணையமைச்சா் துா்கா தாஸ் யுகே கலந்துகொண்டு 268 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது:
அரசுப் பணிகளுக்கு தயாராகும் இளைஞா்களுக்கு மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் மத்திய அரசின் பல்வேறு தோ்வுகளை தமிழ் உள்பட 13 இந்திய மொழிகளில் நடத்துகிறது. தமிழக இளைஞா்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு, புதுச்சேரி மத்திய சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) முதன்மை தலைமை ஆணையா் ராம் நிவாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.