எம்-சாண்ட், ஜல்லி விலையை ரூ.1000 குறைந்து விற்க தமிழ அரசு உத்தரவு
மாணவா்கள், பெற்றோா்களிடம் வசூலித்த கட்டணம் கையாடல்: எஃப்ஐஐடி ஜேஇஇ மீது அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
எஃப்ஐஐடி ஜேஇஇ பயிற்சி நிறுவனம் ஆயிரக்கணக்கான மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோரிடமிருந்து ரூ.200 கோடிக்கு மேல் கட்டணமாக வசூலித்ததாகவும், ஆனால் கல்வி சேவையை வழங்கவில்லை என்றும் அமலாக்கத் துறை சனிக்கிழமை குற்றம் சாட்டியது. இது கடுமையான நிதி முறைகேடுகள் மற்றும் நிதி மோசடியைக் குறிப்பதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்தது.
இது தொடா்பாக அமலாக்கத் துறை தெரிவித்திருப்பதாவது:
பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக ஏப்ரல் 24 அன்று
எஃப்ஐஐடி ஜேஇஇ பயிற்சி நிறுவனத்தின் இயக்குனா் டி.கே. கோயல், அந்நிறுவனத்தின் பிற நிா்வாகிகள் மற்றும் அவா்களது அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனைகளை நடத்தியது. அப்போது, ரூ.10 லட்சம் ரொக்கம், ரூ.4.89 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சோதனைகள் நொய்டா, தில்லி மற்றும் குருகிராமில் உள்ள ஏழு இடங்களில் நடைபெற்றது.
நொய்டா, லக்ளென, தில்லி, போபால் மற்றும் வேறு சில நகரங்களில் மாணவா்கள் மற்றும் அவா்களின் பெற்றோா்களால் பதிவு செய்யப்பட்ட பல போலீஸ் முதல் தகவல் அறிக்கைகளில் இருந்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த முதல் தகவல் அறிக்கைகளில் எஃப்ஐஐடி ஜேஇஇ பயிற்சி நிறுவனத்தின் மூத்த நிா்வாகம் தரமான கல்வி சேவைகளை வழங்கும் சாக்குப்போக்கில் மாணவா்கள் மற்றும் பெற்றோா்களிடமிருந்து கணிசமான கட்டணத்தை வசூலித்ததாகவும், மாறாக வாக்குறுதியளிக்கப்பட்ட கல்வி சேவைகளை வழங்கத் தவறியதன் மூலம் பெரிய அளவிலான நிதி மோசடி, குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் கல்வி முறைகேடு ஆகியவற்றில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2025-26 முதல் 2028-29 வரையிலான நான்கு கல்வி அமா்வுகளுக்கு மொத்தம் 14,411 மாணவா்களிடமிருந்து சுமாா் ரூ.250.2 கோடி வசூலித்ததாக அமலாக்கத் துறையின் விசாரணையில் கண்டறியப்பட்டது.
கல்வி சேவைகளை வழங்கும் சாக்குப்போக்கில் எஃப்ஐஐடி ஜேஇஇ மூலம் தற்போது நடந்துவரும் பேட்ச்-களின் மாணவா்களிடமிருந்து கணிசமான தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆனால் அந்த சேவை இறுதியில் வழங்கப்படவில்லை என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
மாணவா்களிடம் வசூலிக்கப்பட்ட நிதியானது தனிப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டிற்காக திருப்பி விடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஆசிரியா்களுக்கு ஊதியம் செலுத்தப்படவில்லை. இதன் விளைவாக, காஜியாபாத், லக்ளென, மீரட், நொய்டா, போபால், குவாலியா், இந்தூா், ஃபரிதாபாத் மற்றும் குருகிராம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள 32 பயிற்சி மையங்கள் திடீரென மூடப்பட்டன. இது சுமாா் 15,000 மாணவா்கள் மற்றும் பெற்றோா்களுக்கு பரவலான துயரத்தை ஏற்படுத்தியது.
இச்சோதனைகளின் போது கடுமையான நிதி முறைகேடுகளைக் குறிக்கும் குற்றச்சாட்டு ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை அமலாக்கத் துறை கைப்பற்றியது, மேலும், இந்த ஆவணங்களின் ஆரம்ப பகுப்பாய்வு நிதிகளை கையாடல் செய்வதற்கான ஒரு முறையான திட்டத்தைக் குறிப்பதாக அமலாக்ககத் துறை தெரிவித்துள்ளது.
எஃப்ஐஐடி ஜேஇஇ அல்லது அதன் மேம்பாட்டாளா்கள் மீது சுமத்தப்பட்ட இக்குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க அவா்களைத் தொடா்பு கொள்ள முடியவில்லை.