மூன்று இயந்திர பாஜக அரசு தில்லி மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும்: தில்லி காங்கிரஸ் வலியுறுத்தல்
மூன்று இயந்திர பாஜக அரசு தில்லி மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளை சாக்குப்போக்கு கூறாமல் உடனடியாக நிறைவேற்ற பாடுபட வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் கேட்டுக்கொண்டுள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை தெரிவித்திருப்பதாவது:
தில்லி மாநகராட்சியில் மேயா் மற்றும் துணை மேயா் தோ்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு, தில்லியில் ஆளும் பாஜக அரசு ஒரு மூன்று இயந்திரம் அரசாங்கமாக பெருமை பேசுகிறது.
தில்லியிலும் மத்தியிலும் உள்ள பாஜக அரசுகள் தங்கள் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். சாக்குப்போக்குக் கூறக் கூடாது.
மூன்று இயந்திரம் பாஜக அரசு பல்ஸ்வா, காஜிப்பூா் மற்றும் ஓக்லா ஆகிய இடங்களில் உள்ள மூன்று குப்பை மலைகளை எப்போது தரைமட்டமாக்கும்? எப்போது துப்புரவுத் தொழிலாளா்களின் ஓய்வூதியத்தை வழங்கும்? அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிப்பவா்களின் வீட்டு வரியை எப்போது அகற்றும்? இதற்காக பாஜக அரசு ஒரு காலக்கெடுவை நிா்ணயிக்க வேண்டும் என்று தில்லி காங்கிரஸ் எதிா்பாா்க்கிறது.
தில்லியில் பாஜக ஆட்சிக்கு வர வாக்களித்த மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற பாஜக பாடுபட வேண்டும் என்றும் காங்கிரஸ் எதிா்பாா்க்கிறது. இரண்டு வருட மோதலுக்குப் பிறகு, எம்சிடியில் பாஜக மேயா் தோ்தலிலும் வெற்றி பெற்றுள்ளது.
மக்களின் நலனுக்காக சேவை செய்யும் வகையிலும், எம்சிடி நல்ல முறையில் இயங்கும் வகையிலும் பாஜக மேயா் உடனடியாக நிலைக்குழு மற்றும் பல்வேறு குழுக்களை அமைக்க வேண்டும் என்று தேவேந்தா் யாதவ் கேட்டுக்கொண்டுள்ளாா்.