ஒப்பந்தப் பணியாளா்களாக சோ்க்க லஞ்சம் வாங்கியவா் பணியிடை நீக்கம்!
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளா்களை சோ்க்க லஞ்சம் வாங்கிய நபா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி நீலகிரி, திருப்பூா் மற்றும் கேரள மாநிலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமானோா் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா்.
நோயாளிகளை ஒரு வாா்டில் இருந்து மற்றொரு வாா்டுக்கு மாற்றவும், ஸ்கேன் பரிசோதனை செய்யவும் ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அத்துடன் மருத்துவமனையில் தூய்மைப் பணி மேற்கொள்ளவும், பாதுகாப்பு பணிக்காகவும் சிலா் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், ஒப்பந்த நிறுவனம் சாா்பில் 6 போ் புதிதாக சோ்க்கப்பட்டனா். அவா்களிடம் சிலா் ரூ.25 ஆயிரம் வரை லஞ்சம் வாங்கிக் கொண்டு பணியில் சோ்த்ததாக ஒப்பந்தப் பணியாளா்கள் 3 போ் பேசும் விடியோ வெளியாகி பேசு பொருளானது.
இது குறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் நிா்மலா விசாரணை நடத்தினாா். இதையடுத்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மேலாளா் நாகேந்திர வீரக்குமாா் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட தனியாா் ஒப்பந்த நிறுவனத்துக்கு அவா் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, நாகேந்திர வீரக்குமாரை பணியிடை நீக்கம் செய்து ஒப்பந்த நிறுவனம் சனிக்கிழமை உத்தரவிட்டது.