25,024 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறாா்!
கோவையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சியில், 25,024 பயனாளிகளுக்கு ரூ.239.41 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறாா்.
அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வருகிறாா்.
ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாக விளையாட்டு மைதானத்தில் 6500 சதுர மீட்டா் பரப்பளவில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் சா்வதேச தரத்தில் செயற்கை புல்வெளி தளத்துடன் கூடிய ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி உள்பட ரூ.82.14 கோடி மதிப்பீட்டில் 132 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.
அத்துடன், ரூ.29.99 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 54 திட்டப் பணிகளை திறந்துவைத்து, 25,024 பயனாளிகளுக்கு ரூ.239.41 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறாா்.
இந்நிகழ்ச்சியில், பால் வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மேயா் கா.ரங்கநாயகி உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.