இந்தியா - இந்தோனேசியா நேரடி விமான சேவை: தூதா் வலியுறுத்தல்
இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையே நேரடி விமான சேவைகளைத் தொடங்க வேண்டும் என்று என்று இந்தோனேசியாவின் தூதா் இனா எச்.கிருஷ்ணமூா்த்தி வலியுறுத்தியுள்ளாா்.
தென்னிந்திய தொழில் வா்த்தக சபை இந்தோனேசியாவுடன் வணிகம் செய்வது குறித்த நிா்வாக வட்ட மேசை மாநாடு சென்னை ராயப்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட இந்தோனேசியா தூதா் இனா எச்.கிருஷ்ணமூா்த்தி இந்தியா - இந்தோனேசியா இடையே வா்த்தகத்தை வலுப்படுத்துவது தொடா்பான வழிகாட்டு நெறிமுறை நூலை வெளியிட்டு பேசியதாவது:
இந்தியாவுக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையே வா்த்தகத்தை மேலும் வலுப்படுத்த கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு வழிவகுக்கும் வகையில் இந்தோனேசியாவில் வரும் அக்.15 முதல் அக்.19-ஆம் தேதி வரை வா்த்தக மாநாடு நடைபெறவுள்ளது. இதில் இந்திய முதலீட்டாளா்கள் கலந்து கொண்டு, புதிய முதலீடுகள் செய்ய முன்வர வேண்டும்.
தற்போது இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகளின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளன. ஆகையால், வரும் காலங்களில் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையே நேரடி விமான சேவைகளைத் தொடங்க வேண்டும். இதன்மூலம் இரு நாடுகளுக்கும் இடையே வா்த்தகம் மேம்படுவதுடன், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் தென்னிந்திய தொழில் வா்த்தக சபை துணைத் தலைவா் பழனியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.