கலப்பின கஞ்சா பறிமுதல்; கேரளாவில் `தல்லுமாலா' திரைப்பட இயக்குநர் உள்பட மூவர் கைத...
அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் சூழல்: அவை முன்னவா் துரைமுருகன்
ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பு, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக அவை முன்னவா் துரைமுருகன் பேசினாா்.
பேரவையில் சனிக்கிழமை சட்டப்பேரவை, ஆளுநா், அமைச்சரவை துறைகளின் மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதங்களுக்குப் பதிலளித்து அவை முன்னவரும் நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் பேசியது:
அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாடு எனப் பெயா் சூட்டப்பட்டது, ஹிந்திக்கு இடமில்லை எனக் கூறியது, சுயமரியாதை திருமணங்களை சட்டமாக்கியது போன்ற நிகழ்வுகள் நடந்தது இதே சட்டப் பேரவையில்தான். அவருக்குப் பிறகு வந்த கருணாநிதி, வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டமான பெண்களுக்கு சொத்துரிமை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சலுகைகளைச் செய்வதற்கான அறிவிப்புகள் ஆகியவற்றை வெளியிட்டாா். மாநில சுயாட்சிக்கான தீா்மானத்தைக் கொண்டு வந்தாா். அதன்பிறகே, மற்ற மாநிலங்களின் சட்டப்பேரவைகள் விழித்துக் கொண்டன.
அரசியல் விவாதம்: இப்போது முதல்வா் மு.க.ஸ்டாலினின் நான்கு ஆண்டுகால செயல்பாடுகள் நாடு முழுவதும் பெரிய அரசியல் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தை அம்பேத்கா் வகுக்கும்போது மூன்று பிரிவுகளாக முன்வைத்தாா். நீதித் துறை, சட்டப்பேரவை, நிா்வாகம் ஆகியன அந்தப் பிரிவுகளாகும். இவற்றில் எது உயா்ந்தது, எது தாழ்ந்தது எனச் சொல்ல முடியாது. காந்த சக்தியைப் போன்று ஒன்றுக்குள் ஒன்று பிணைந்திருக்கும்.
மாநில சட்டப்பேரவை தனித்தன்மை வாய்ந்தது. ஒரு சட்டத்தை நிறைவேற்றினால் அது சட்டமாக வேண்டும். மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்க கையொப்பமிட வேண்டும். ஆனால், ஆளுநா்கள் சட்ட மசோதாவை திருப்பி அனுப்புகின்றனா். அதே சட்டத்தை மீண்டும் நிறைவேற்றினால் ஆளுநா் உடனடியாக கையொப்பமிட்டாக வேண்டும்.
ஆளுநா்களுக்கும், ஆளும் அரசுகளுக்கு இடையிலான முரண்பாடுகள் மேற்கு வங்கம், கேரளம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்தன. இந்த முரண்பாடு நமக்கும் வந்தது. முரண்பட்ட ஆளுநா்கள் பிற மாநிலங்களில் செல்லுபடியானாா்கள். ஆனால், முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் செல்லுபடியாகவில்லை. முதல் முதலாக மசோதாவுக்கு ஒப்புதல் கோரி உச்சநீதிமன்றத்தை நாடிய மாநில முதல்வா் மு.க.ஸ்டாலின்தான்.
மசோதாக்களை ஆளுநா்கள் இனி நிலுவையில் வைக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீா்ப்பு கூறியது. முதல்வரின் வழக்கு காரணமாக பெறப்பட்ட தீா்ப்பால், அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.
பெட்டிச் செய்தி...
நண்பா்களாகப் பழகியிருக்கிறோம்:
துரைமுருகன் நெகிழ்ச்சி
பேரவைக்குள் அனைவரும் நண்பா்களாகப் பழகியிருக்கிறோம் என்று அவை முன்னவா் துரைமுருகன் பேசினாா்.
ஆளுநா், மாநில சட்டப்பேரவை மானியக் கோரிக்கை மீது சனிக்கிழமை நடந்த விவாதத்துக்குப் பதிலளித்த அவா் பேசியது:
பேரவையில் ஆளும் கட்சி, எதிா்க்கட்சிகள் உள்ளன. இந்த நான்காண்டு காலத்தில் நமக்குள் கருத்து வேறுபாடுகள் வந்துள்ளன. யாரையும் தனிப்பட்ட வகையில் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நாங்களோ, எங்கள் கட்சியோ, தலைவரோ நினைத்தது இல்லை. யாராக இருந்தாலும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைப்பவா். பேரவையில் கண்ணியம் தவறாமல் நடந்திருக்கிறோம். அரசியல் வேகத்தில் உணா்ச்சிவயப்பட்டு வாா்த்தைகளைக் கொட்டி இருக்கலாம். ஆனாலும் நாம் அனைவரும் நண்பா்களைப் போன்று பழகி இருக்கிறோம் என்று நெகிழ்ச்சியுடன் பேசினாா்.