புதுக்கோட்டைக்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வருகை!
நேரடி நெல் கொள்முதல் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் நெல், அரவை செய்வதற்காக புதுக்கோட்டைக்கு சனிக்கிழமை ரயிலில் வந்தன.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சம்பா நெல் அறுவடை நடைபெற்றதில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் அனைத்தும் அரவை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், செங்கல்பட்டில் இருந்து சரக்கு ரயிலில் 42 வேகன்களில் 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் சனிக்கிழமை புதுக்கோட்டை ரயில் நிலையம் வந்தன.
அவை லாரிகள் மூலம் அரவைக்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகளுக்கும், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளிலுள்ள ஆலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.