கலப்பின கஞ்சா பறிமுதல்; கேரளாவில் `தல்லுமாலா' திரைப்பட இயக்குநர் உள்பட மூவர் கைத...
மச்சுவாடியில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!
புதுக்கோட்டை மாநகருக்குள்பட்ட மச்சுவாடியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
புதுக்கோட்டை நகருக்கு அருகே தஞ்சாவூா் செல்லும் சாலையில் மச்சுவாடி உள்ளது. இங்கு பிரதான சாலையின் வலதுபுறம் பிரிந்து செல்லும் சாலையில் சுமாா் அரை கி.மீ. தொலைவில், மாவட்ட வன அலுவலகம், அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியும், மாவட்ட அரசு ஆசிரியா் பயிற்சி நிலையமும் உள்ளன.
இந்த மேல்நிலைப் பள்ளிக்கும், ஆசிரியா் பயிற்சி நிலையத்துக்கும் நாள்தோறும் சுமாா் ஆயிரம் மாணவா்கள் சென்று திரும்புகின்றனா். மாவட்ட வன அலுவலகத்துக்கும் கணிசமான மக்கள், அதிகாரிகள் சென்று திரும்புகின்றனா்.
ஆனால், இச்சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் வருவோா் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் பலரும் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கையை எழுப்பியும், வன அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் உள்ளாட்சி நிா்வாகத்தால் அச்சாலையை போட முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், வட்டார வளா்ச்சி அலுவலா்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இச்சாலையைப் போடுவதற்கு அவா்கள் போதிய நிதி இல்லை என்று கூறிவிட்டதாகவும், தற்போது மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதியாகிவிட்டது என்றும் வனத்துறையினா் கூறுகின்றனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா் பேரா. சா. விஸ்வநாதன் கூறியது: மாணவா் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இந்தச் சாலையை தரமான தாா்ச்சாலையாக மேம்படுத்த வேண்டும். தொடா்ந்து சமூக ஊடகங்களில் இப்பிரச்னை எழுப்பப்பட்டு வந்ததைத் தொடா்ந்து புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜாவும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆனாலும் ஏறத்தாழ 3 ஆண்டுகளுக்கும் மேலாகயும் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை என்றாா் அவா்.
மச்சுவாடி முதல்கொண்டு முள்ளூா் ஊராட்சி வரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுவிட்டதால் முறைப்படி இந்தச் சாலையை கேட்டுப் பெற்று உரிய வகையில் தாா்ச்சாலையாக அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.