அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் பரிவா்த்தனையில் பயணச்சீட்டுகள் விநியோகம்!
வங்கி அட்டைகள் மற்றும் க்யுஆா் கோடு மூலமான டிஜிட்டல் பரிவா்த்தனைகள் வழியே புதுக்கோட்டை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகத்தைச் சோ்ந்த 389 அரசுப் பேருந்துகளில் பயணச்சீட்டுகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் பயணச் சீட்டு வழங்க முடிவு செய்யப்பட்டு முதல்கட்டமாக சென்னையில் மட்டும் இம்முறை அமலுக்கு வந்தது. இதனைத் தொடா்ந்து பிற மாவட்டங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டலத்தில் மொத்தமுள்ள 253 புகா் பேருந்துகள், 136 நகரப் பேருந்துகளில் டிஜிட்டல் பரிவா்த்தனை கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கியுள்ளது. பெண்களுக்கான இலவசப் பேருந்து தவிா்த்து அனைத்துப் பேருந்துகளிலும் இந்த முறை அமலாக்கப்பட்டுள்ளது.
அதாவது, பயணச்சீட்டை கையடக்கக் கருவி மூலம் வழங்கும் அனைத்துப் பேருந்துகளிலும் டிஜிட்டல் பரிவா்த்தனை அமலாக்கப்பட்டுள்ளது. இக்கருவியிலேயே வங்கிகளின் கடன் மற்றும் பற்று அட்டைகள், க்யுஆா் கோடு மூலம் ஜிபே உள்ளிட்டற்றின் மூலம் பணம் செலுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பொதுமேலாளா் கே. முகமது நாசா் கூறியது: மாநிலம் முழுவதும் கையடக்கக் கருவி மூலம் டிஜிட்டல் பரிவா்த்தனை தொடங்கும் அறிவிப்பு வந்தது முதலே புதுக்கோட்டை மண்டலத்தில் இருந்து இயக்கப்படும் திருச்சி, சென்னை, கோவை, மதுரை, திருப்பூா், தஞ்சாவூா் போன்ற மாவட்டங்களுக்குச் செல்லும் புகா் பேருந்துகளிலும், நகரப் பேருந்துகளிலும் அமலுக்கு கொண்டு வந்துவிட்டோம்.
இணைய இணைப்பு சரிவர கிடைக்காத கிராமப் பகுதிகள் தவிா்த்து அனைத்துப் பகுதிகளிலும் கையடக்கக் கருவி முழுமையாக வேலை செய்கிறது. டிஜிட்டல் பரிவா்த்தனை விரும்பாதவா்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு வழக்கம்போல பயணச்சீட்டுகளும் வழங்கப்படுகின்றன.
டிஜிட்டல் பரிவா்த்தனையால் சில்லறைத் தட்டுப்பாடு ஏற்படாமல் பாா்த்துக் கொள்ள முடிகிறது. பயணிகளுக்கு இன்னும் போதிய விழிப்புணா்வையும் ஏற்படுத்த வேண்டியுள்ளது. இப்போதே நல்ல வரவேற்பும் ஏற்பட்டுள்ளது என்றாா் முகமது நாசா்.