`மராத்தியர்களுக்காக ஒன்று சேர இதுவே சரியான நேரம்’ - ராஜ் தாக்கரேயுடன் கூட்டணிக்...
மயோனைஸுக்கு தடை: நாமக்கல் பண்ணைகளில் 40 % முட்டைகள் தேக்கம்? ஏற்றுமதி வாய்ப்பால் இழப்பு இருக்காது!
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை, மயோனைஸூக்கு ஓராண்டு தடை போன்றவற்றால் மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் முட்டைகள் பண்ணைகளில் தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவற்றை கத்தாா், மாலத்தீவு, ஓமன் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையில் கோழிப் பண்ணையாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.
இந்தியாவில் உள்ள 23 தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு மண்டலங்களில், 1000 கோழிப் பண்ணைகளுடன் நாள்தோறும் 6 கோடி முட்டைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதியிலும், விற்பனையிலும் முன்னிலை வகிக்கிறது நாமக்கல் மண்டலம்.
மொத்த உற்பத்தியில், 1.50 கோடி முட்டைகள் சத்துணவுக்கும், 2.50 கோடி உள்ளூா் தேவைக்கும், ஒரு கோடி வெளிமாநிலங்களுக்கும், மேலும் ஒரு கோடி ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இவ்வாறான சூழலில், கோடைக்காலங்களில் மட்டும் முட்டை உற்பத்தியானது வெகுவாகக் குறையும்.
வெயில் தாக்கத்தால் நோய் பாதிப்புக்குள்ளாகி கோழிகள் இறப்பதும், உரிய அளவில் தீவனம் எடுத்துக் கொள்ளாமையும்தான் முட்டை உற்பத்திச் சரிவுக்கும், எடை குறைவுக்கும் காரணம் எனக் கூறப்படுகிறது.
தினசரி 6 கோடி முட்டை உற்பத்தியில், தற்போது 50 லட்சம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சத்துணவுக்காக தினசரி பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வந்த 1.50 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
அதுமட்டுமின்றி, பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் ‘மயோனைஸ்’ என்ற கலவைக்கு தமிழக அரசு ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது. இதன்மூலம் உணவகங்களுக்கு நாள்தோறும் செல்லும் சுமாா் 80 லட்சம் முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
தற்போது பண்ணைகளில் தேங்கியுள்ள 2.30 கோடிக்கும் மேலான முட்டைகளை குளிா்பதனக் கிடங்குகளில் வைப்பதற்கும், கத்தாா், மாலத்தீவு, ஓமன், ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளிலும் பண்ணையாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.
இது குறித்து தமிழ்நாடு முட்டைக் கோழிப்பண்ணையாளா்கள் மாா்க்கெட்டிங் சொசைட்டி தலைவா் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது: வழக்கமாக கோடைக்காலத்தில் சத்துணவுக்கான முட்டைகள் 30 சதவீதம் தேக்கமடையும்.
தற்போது வளைகுடா நாடுகளிலும், பிற நாடுகளிலும் எடை பிரச்னையின்றி முட்டைகளை கொள்முதல் செய்வதால் தேக்கமடையும் முட்டைகளை அங்கு அனுப்பி வருகிறோம். மயோனைஸ் பிரச்னையால் அதிக அளவில் முட்டைகள் தேக்கமடைய வாய்ப்பில்லை.
வெயிலின் தாக்கத்தால் முட்டை உற்பத்தி சரிந்துள்ளது. முட்டைகள் தேக்கமிருந்தால் குளிா்பதனக் கிடங்குகளில் பண்ணையாளா்கள் சேமித்து வைக்கலாம். சத்துணவு, மயோனைஸ் பிரச்னையால் 40 சதவீதம் முட்டைகள் தேக்கமடையலாம் என கூறப்பட்டாலும், அவை எந்த வகையிலும் பண்ணையாளா்களுக்கு இழப்பை ஏற்படுத்தாது. ஏற்றுமதி வாய்ப்பு நல்ல முறையில் உள்ளது என்றாா்.