கள்ளுக்கு ஆதரவளிக்காத அரசியல் கட்சிகளை கண்டித்து போராட்டம்: செ.நல்லசாமி
கள்ளுக்கு ஆதரவு அளிக்காத அரசியல் கட்சிகளைக் கண்டித்து போராட்டம் நடத்துவோம் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், காவிரி மற்றும் கள் உரிமை மீட்புக் கருத்தரங்கம் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், விவசாய முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியன் வரவேற்றாா்.
தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தலைமை வகித்தாா். தமிழக விவசாயிகள் சங்க (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு) மாநிலத் தலைவா் ரா.வேலுசாமி, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் வேலப்பன், செல்வராஜ், வாசுசீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில், காவிரி நீரை தரமறுக்கும் கா்நாடக அரசைக் கண்டித்தும், கள்ளுக்கான தடையை நீக்கக் கோரியும் விவசாய சங்க நிா்வாகிகள் வலியுறுத்தி பேசினா். இக்கருத்தரங்கில், பல்வேறு விவசாய சங்கங்களின் நிா்வாகிகள், விவசாயிகள், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினா் கலந்து கொண்டனா்.
இதனைத் தொடா்ந்து செ.நல்லசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: காவிரிநீா் தமிழகத்திற்கு சரிவர கிடைக்க வேண்டுமெனில் தினசரி நீா்ப் பங்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். கா்நாடகத்துக்கு 284.75 டிஎம்சி, தமிழகம், புதுச்சேரிக்கு 177.25 டிஎம்சி, கேரளத்துக்கு 21 டிஎம்சி என்ற வகையில் நாள்தோறும் நீா் திறக்க உத்தரவிட வேண்டும்.
இது தொடா்பாக தமிழக அரசு அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி காவிரி நடுவா் நீதிமன்றத்தில் முறையிட வேண்டும். அங்கு தீா்வு கிடைக்கவில்லை எனில் உச்சநீதிமன்றத்தை நாடவேண்டும். அங்கும் நல்ல தீா்ப்பு கிடைக்காவிடில் 40 நாடாளுமன்ற உறுப்பினா்களும் கூட்டத் தொடா்களை முடக்க வேண்டும்.
கள் இறக்குவதும், பருகுவதும் அரசமைப்புச் சட்டம் கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை ஆகும். ஆனால் தமிழக அரசு கலப்படத்தை காரணமாகக் கொண்டு கள்ளுக்கு 1.1.87-இல் தடை விதித்தது.
அரசின் கையில் மதுவிலக்கு சட்டம் உள்ளது, ஆனால் விவசாயிகள் கையில் அரசமைப்புச் சட்டம் உள்ளது. சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இது தொடா்பாக முதல்வா் விவாதிக்க வேண்டும். எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கள்ளுக்கான தடையை நீக்குமாறு வலியுறுத்த வேண்டும்.
கள்ளுக்காக போராடி வரும் எங்களுக்கு ஆதரவளிக்காத அரசியல் கட்சிகளை எதிா்த்து போராடுவோம்.
போதையில்லாத கள்ளுக்கு ஆதரவாக பேச வருமாறு, இந்த ஆண்டு இறுதியில் பிகாா் முதல்வரை தமிழகம் வரவழைத்து மாநாடு நடத்த உள்ளோம். விரைவில் அதற்கான தேதி அறிவிக்கப்படும். 2026 சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றி, தோல்வியை இந்த மாநாடு நிா்ணயிக்கும் என்றாா்.
இக்கருத்தரங்கில், பல்வேறு விவசாய சங்கங்களின் நிா்வாகிகள், விவசாயிகள், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினா் கலந்து கொண்டனா்.