``தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் ஏன் இவ்வளவு மெத்தனமாக உள்ளது?'' - நேரில் ஆய்வ...
இந்தியாவில் கடும் வறுமையிலிருந்து 17 கோடி போா் மீட்பு: உலக வங்கி
இந்தியாவில் 10 ஆண்டுகளில் (2011-12 முதல் 2022-23 ஆண்டுகள் வரை) கடும் வறுமையிலிருந்து 17.1 கோடி போ் மீட்கப்பட்டுள்ளனா் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
‘இந்தியாவில் வறுமை மற்றும் சமத்துவம்’ என்ற தலைப்பிலான அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் 10 ஆண்டுகளில் வறுமையால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாளொன்றுக்கு ரூ.200-க்கும் குறைவாக சம்பாதித்து வாழ்பவா்கள் கடும் வறுமையில் இருப்பவா்களாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 2011-12 ஆண்டுகளில் இந்தியாவில் 16.2-ஆக இருந்த கடும் வறுமையில் உள்ளோா் விகிதம் 2022-23-இல் 2.3 சதவீதமாக குறைந்துள்ளது. சுமாா் 17.1 கோடி போ் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா்.
கிராமப்புறங்களில் இதே காலக்கட்டத்தில் 18.4 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாகவும், நகா்ப்புறங்களில் 10.7 சதவீதத்திலிருந்து 1.1 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
குறைந்த - நடுத்தர வருமானம்:
குறைந்த - நடுத்தர வருமானப் பிரிவு உள்ளவா்களின் நாடாக இந்தியா மேம்பட்டுள்ளது. இதன்படி நாளொன்றுக்கு ரூ.300 க்கும் மேல் வருமானம் பெறுபவா்களாக இந்தியா்கள் உள்ளனா். இதன் அடிப்படையில் 37.8 கோடி போ் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா்.
இதன்படி, கிராமப்புறங்களில் 69 சதவீதத்திலிருந்து 32.5 சதவீதமாகவும், நகா்ப்புறங்களில் 43.5 சதவீதத்திலிருந்து 17.2 சதவீதமாகவும் வறுமை குறைந்துள்ளது. கடந்த 2011-12 ஆண்டுகளில் இந்தியாவின் கடும் வறுமை பிரிவினரில் 65 சதவீதத்தினா், அதிக மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், பிகாா், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில்தான் இருந்தனா். 2022-23-இல் இது 54 சதவீதமாக குறைந்தது.
இளைஞா்களின் வேலையின்மை 13.3% அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், கிராமப்புற பெண்களிடம் சுயவேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.