செய்திகள் :

நினைவில் காடுள்ள மிருகம்! மோகன்லாலின் துடரும் - திரை விமர்சனம்!

post image

'சுவாமியே சரணம் அய்யப்பா..' குரலுடன் மோகன்லால் கதாபாத்திரம் அறிமுகமாகிறது. மிக ஜாலியான, சாதாரண கார் ஓட்டுநராக தன் எளிய குடும்பத்துடன் ஊரில் அழகாக வலம் வருகிறார். யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்காத, மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே போதும் என நினைக்கும் தன் குடும்பத்தைவிட ஒருபடி மேலாக தான் வைத்திருக்கிற கருப்பு அம்பாசிடர் காரை அதிகம் நேசிக்கிறார் மோகன்லால். அந்த வண்டியை அவரைத் தவிர யாரும் ஓட்டக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதற்கு, அவர் இத்தொழிலுக்கு வருவதற்கு முன் என்ன செய்துகொண்டிருந்தார்? அந்தக் கார் யாருடையது என்கிற நெகிழ்ச்சியான கதையை இயக்குநர் வைத்திருக்கிறார்.

ஒருநாள் மோகன்லாலின் காரை காவலர்கள் பறிமுதல் செய்து, காவல்நிலையத்தில் வைக்கின்றனர். எதற்காகக் காரை எடுத்தார்கள்? காவல் நிலையத்திலிருக்கும் தன் காரை மோகன்லால் மீட்டாரா? மீட்டதற்குப் பின் நடக்கும் அழுத்தமான சம்பவம் என துடரும் (தொடரும்) படத்தின் கதை செல்கிறது.

’ஒரு யானை நடக்கும்போது அதனுடன் காடும் நகர்கிறது’ என்கிற வரியே ஒட்டுமொத்த படத்தின் நாதமாக ஒலிக்கிறது. மோகன்லாலின் பலம் என்னவோ அதை மையமாக வைத்து கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் தருண் மூர்த்தி . காட்டில் யானையைத் தவிர பிற விலங்குகள் தங்களுக்கான தனிப்பாதை என ஒன்றை உருவாக்குவதில்லை. யானைகள் மட்டுமே வலசைகளை உருவாக்குகின்றன. மோகன்லால் நடிப்பில் ஒரு யானை.

பலமும் பலவீனமும் கொண்ட உயிரினமாக இருந்தாலும் இப்படத்தில் முழுக்க முழுக்க மோகன்லாலின் நகைச்சுவை தழும்பும் புன்னகையும் (மோகன்லால் தன் முகத்தை அறுவை சிகிச்சை செய்ததால் கண்களுக்கு கீழே உள்ள தசைகள் இறுக்கமாகியுள்ளன. அதனால், அவருக்கே உரித்தான குழந்தைதனங்கள் புதிய முகத்தில் குறைந்துவிட்டன) தன் குடும்பம் பாதிக்கப்பட்டால் பதறும் தலைவனாகவும் இழப்பும் ஆத்திரமும் வெளிப்படும் கதாபாத்திரமாகவே மோகன்லால் வடிவமைக்கப்பட்டிருக்கிறார்.

படத்தில் மோகன்லாலுக்கு பென்ஸ் எனப் பெயரிட்டுள்ளனர். அங்கிருந்து ஆரம்பமாகும் வாழ்க்கைச் சூழலுடன் கூடிய நகைச்சுவைகள் முதல்பாதி முழுக்க நிரம்பி, சின்னச் சின்ன இடங்களில்கூட சிரிக்க வைக்கின்றன.

மனைவியான ஷோபனா தன் கணவனிடம் தாடியை எடுக்காதே என சொல்லிச் செல்வதும், புகைப்படம் எடுக்கும்போது மனைவியின் கூந்தலை சரி செய்வதுமென இருவருக்கும் இடையேயான காதல் ரசிக்க வைக்கிறது. இருவரும் சண்டையிட்டுக் கொண்டாலும் ஒரு குடும்பத்தில் கணவன் மனைவிக்கும் இடையேயான காதல்மொழிகள் இப்படித்தான் இருக்கின்றன என்பதை இயக்குநர் வசனங்கள் வழியே கொண்டுசென்றது சிறப்பு.

ஷோபனா பெரும்பாலும் தமிழில்தான் பேசுகிறார். இருவரும் இணைந்து 50 படங்களுக்கு மேல் நடித்துவிட்டனர். எவர்கிரீன் இணை. சின்ன வருத்தம், மோகன்லாலும் ஷோபனாவும் நடித்த ’நாடோடிகாட்டு’ படத்தில் இடம்பெற்ற ‘வைசாக சந்த்யே’ (vaisakha sandhye) பாடலை இப்படத்தில் எங்காவது இணைத்திருக்கலாம்.

காவல் நிலையத்தில் தன் காரை மீடகப் போராடும் எதார்த்தமான உடல்மொழி, அதிகாரத்தின் பிடியிலிருந்து நழுவ நினைத்தும் அதை தவிர்க்க முடியாத சாமானியனின் பதற்றம் என துடரும் படத்தில் நடிப்பில் விளாசியிருக்கிறார் மோகன்லால்.

கதைக்கருவாக த்ரிஷ்யம் படத்தின் சாயல்கள் ஆங்காங்கு தென்பட்டாலும் இப்படம் வேறொன்றாகவே தனித்து நிற்கிறது. இழப்பும் அதற்குப் பின்பான ஆத்திரமும் மோகன்லாலுக்கு கரும்பு போல் ஆகிவிட்டன. கிரீடம் படத்தில் வெளிப்பட்ட அதே உணர்ச்சி ததும்பல்கள் இன்றும் மாறவில்லை. மொத்த படத்தின் கதையும் சாதாரணமாக இருந்தாலும் தன் நடிப்பால் அசாதாரணத் தருணங்களை உருவாக்கிவிடுகிறார். அப்படி, குளியலறையில் மோகன்லால் அழும் காட்சி ஒன்று உண்டு. இழப்பின் வலி என்ன என்பதை சில நொடிகளில் கடத்திவிட்டார். என்ன ஒரு நடிகர்!

என்னதான் மோகன்லாலால் மொத்த படமும் தாங்கப்பட்டாலும் சில குறைகள் இருக்கின்றன. முதல் குறை கதை. சிக்கலில்லாத கதையில் சுவாரஸ்யமான திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், கதை சில இடங்களில் தொய்வைச் சந்திக்கிறது. உணர்வுப்பூர்வமான காட்சிகள் பெரும்பாலும் மோகன்லாலைச் சார்ந்தே இருப்பதால் ஷோபனா உள்பட்ட பிற கதாபாத்திரங்களின் எமோஷனல் காட்சிகள் வலுவைச் சேர்க்கவில்லை. இறுதியாக, ஆவணக்கொலைகள் குறித்த குறிப்பை இயக்குநர் வைக்கிறார். ஆனால், இக்கதையின் மையம் தனிப்பட்ட ஈகோவாக நின்றுவிட்டது.

மோகன்லாலுக்கு அடுத்து பாராட்டப்பட வேண்டிய இன்னொரு நடிகர், வில்லனாக நடித்த பிரகாஷ் வர்மா. நல்ல மனிதராக இருக்கிறாரே? என எண்ண வைத்தவர், கதை நகர நகர அசரடிக்கிறார். இதுதான் இவருக்கு முதல் படமாம். மோகன்லால் போன்ற ஜாம்பவான் நடிகருக்கு வில்லனாக முதல் படத்திலேயே நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார் பிரகாஷ் வர்மா. அவருக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு காட்சியிலும் மிரட்சியைக் கொண்டுவருகிறார்.

துணை காவல் ஆணையராக நடித்த பினு பப்புவும் நல்ல தேர்வு. அதேபோல், சில காட்சிகள்தான் என்றாலும் நடிகர்கள் பாரதிராஜா, இளவரசு கவனம் ஈர்க்கின்றனர்.

படத்தில் பல இடங்களில் நுணுக்கமான வசனங்கள் கவர்கின்றன. ஒரு காட்சியில் மோகன்லாலின் காரை மீட்க அரசியல்வாதி ஒருவர் அதிகாரியிடம் பேசும்போது, கெஞ்சிப்பார்த்து இறுதியில் ‘சரி, ஜெய்ஹிந்த்’ என்கிறார். பதிலுக்கு அந்தக் காவல்துறை அதிகாரி, ‘சரி, லால் சலாம்’ என்கிறார். அதிகாரியின் அரசியல்நிலைப்பாடும் தனிப்பட்ட குணங்களும் எப்படி முரண்பட்டு நிற்கின்றன என்பதை நுட்பமாக சாடியிருக்கிறார் இயக்குநர்.

மோகன்லாலின் நடிப்புக்கு பெரிய பக்கபலமாக அமர்களப்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய். கண்மணிப்பூவே பாடலிலேயே பென்ஸ் கதாபாத்திரத்தின் ஒட்டுமொத்த தோற்றமும் தெரிந்துவிடுகிறது. இரண்டாம் பாதி முழுக்க அதிரடியாக செல்வதால் அதற்கேற்ப பின்னணி இசையும் அட்டகாசம்.

மற்றொரு நெருக்கமான விஷயமாக இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களும் பயன்படுத்தபட்டிருக்கின்றன. இளையராஜாவை பிடிக்குமா? என ஒருவர் கேட்கும்போது, “ஆமாம். வாழ்வதற்கான நம்பிக்கையை அவர் பாடல்கள் அளிக்கின்றன.” என்கிறார் மோகன்லால்.

ஒளிப்பதிவாளர் ஷாஜி குமாரின் ஒளியமைப்புகள் நன்று. முக்கியமாக, இடைவேளைக்கு முன்பான காட்சிகள் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கில் அற்புதமாக இருக்கின்றன.

ஒரு காட்டுப்பகுதிக்குள் ஆரம்பிக்கும் கதை காட்டுப்பகுதியில் நிறைவை அடைவது வரை 2.45 மணி நேரம் கொண்ட படத்தை சுவாரஸ்யமாகவே கொண்டு செல்கின்றனர். அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கும் நாயகன் பிரச்னை என வந்ததும் மூர்க்கமாக மாறுகிறார். காட்டிலிருக்கும் விலங்குகளை எவ்வளவு பயிற்சி கொடுத்தாலும் குழந்தைபோல் அரவணைத்தாலும் அது இயல்பில் மிருகம் என்பதை மாற்ற முடியாது. இதைத்தான், நினைவில் காடுள்ள மிருகம் என்கிறோம். இப்படம் அந்த நிலைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

இயக்குநர் தருண் மூர்த்தி நடிகர் மோகன்லாலின் தீவிர ரசிகராம். தன் ஆஸ்தான நடிகரின் பலம் என்ன? என்பதை நன்கறிந்ததாலேயே ‘துடரும்’ மாதிரியான கதையை உருவாக்க முடிந்திருந்திருக்கிறது. மோகன்லாலுக்கும் நீண்ட நாள்களுக்குப் பின் நடிப்பிற்கு தீனிபோட்ட படமாகவே அமைந்துடன் இறுதியில், நல்ல படத்தைப் பார்த்த அனுபவமே கிடைக்கிறது!

இதையும் படிக்க: கைகொடுத்ததா, சுந்தர் சி - வடிவேலு கூட்டணியின் கம்பேக்? - கேங்கர்ஸ் திரை விமர்சனம்

ஆசிய யு 15, யு 17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கங்கள் உறுதி

ஆசிய யு-15, யு-17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 43 பதக்கங்களை இந்திய அணியினா் உறுதி செய்துள்ளனா். மேலும் 4 போ் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனா். ஜோா்டான் தலைநகா் அம்மானில் நடைபெறும் இப்போட்ட... மேலும் பார்க்க

சிட்ஸிபாஸ், டி மினாா், ஆன்ட்ரீவா, கைஸ் முன்னேற்றம் ஜோகோவிச் அதிா்ச்சித் தோல்வி

மாட்ரிட் ஓபன் ஏடிபி, டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் ஆடவா் பிரிவில் ஷபவலோவ், சிட்ஸிபாஸ், டி மினாா், மகளிா் பிரிவில் மிரா ஆன்ட்ரீவா, மடிஸன் கைஸ் ஆகியோா் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனா். ஜாம்பவான் ஜ... மேலும் பார்க்க

ஆசிய பசிஃபிக் ரேலி சாம்பியன்ஷிப்: கா்ணா, மூஸா முதலிடம்

எஃப்ஐஏ ஆசிய பசிஃபிக் ரேலி சாம்பியன்ஷிப்பில் கா்னா கடூா், மூஸா ஷெரீப் இணை முதலிடம் பெற்றுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டை எம்எம்ஆா்சிஐ மைதானத்தில் நடைபெறும் இந்து சந்தோக் நினை... மேலும் பார்க்க

பிஎஸ்ஜிக்கு அதிா்ச்சி அளித்தது நைஸ்

பிரான்ஸின் லீக் 1 கால்பந்து தொடரில் சாம்பியன் பிஎஸ்ஜி அணிக்கு 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை பரிசளித்தது நைஸ். கடந்த வாரம் தான் 78 புள்ளிகளுடன் லீக் 1 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது பிஎஸ்ஜி... மேலும் பார்க்க

கோர்ட் படத்தைப் பாராட்டிய சூர்யா, ஜோதிகா!

நடிகர் சூர்யா தெலுங்கில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற கோர்ட் திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.நடிகர் நானி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராம் ஜெகதீஸ் இயக்கத்தில் உருவான கோர்ட் - ஸ்டேட் விர்சஸ் நோபடி (court ... மேலும் பார்க்க