ஸ்பானிஷ் கோப்பையை வென்றது பார்சிலோனா..! இதுதான் எல் கிளாசிக்கோ!
பிரதமரின் நிவாரண நிதி: 100 பேரின் மருத்துவச் சிகிச்சைக்குப் பரிந்துரை
பல்வேறு மருத்துவச் சிகிச்சைகளுக்கு நிதி வழங்குமாறு கடந்த 11 மாதங்களில் 100 பேரின் மருத்துவச் சிகிச்சைக்குப் பரிந்துரைத்துள்ளதாக விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை. ரவிக்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினராகப் பொறுப்பேற்றதிலிருந்து தற்போது வரையிலான 11 மாதங்களில் 100 பேரின் மருத்துவச் சிகிச்சைக்காக பிரதமரின் நிவாரண நிதி வழங்க பரிந்துரைக் கடிதங்களை வழங்கியுள்ளேன். ரூ.6.62 கோடி மதிப்பில் இந்த சிகிச்சைகள் அளிக்கப்படும்.
இந்த 100 நோயாளிகளில் 84 போ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்கள் ஆவா். இதய அறுவைச் சிகிச்சை பெறுவதற்காக 9 பேருக்கும், மூளையில் ஏற்பட்ட கட்டியை அகற்றும் அறுவைச் சிகிச்சைக்காக ஒருவருக்கும், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக 5 பேருக்கும், ஸ்டெம்செல் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக ஒருவருக்கும் என மொத்தமாக 100 பேருக்கு பிரதமரின் நிவாரண நிதி மூலம் மருத்துவச் சிகிச்சைக்காக நிதி ஒதுக்கீடு செய்யப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 84 பேரில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும். இதில் மாா்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்கள் 18 பேரும், கா்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்கள்11 பேரும் ஆவா் என்று துரை.ரவிக்குமாா் எம்.பி. தெரிவித்துள்ளாா்.