ஸ்பானிஷ் கோப்பையை வென்றது பார்சிலோனா..! இதுதான் எல் கிளாசிக்கோ!
உளுந்தூா்பேட்டை அருகே எத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்து!
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே எத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி சனிக்கிழமை காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநா் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.
மேற்கு வங்க மாநிலத்திலுள்ள தனியாா் தொழிற்சாலையிலிருந்து சுமாா் 40 ஆயிரம் லிட்டா் எத்தனாலை ஏற்றிக் கொண்டு டேங்கா் லாரி திருச்சி மாவட்டம், வாழவந்தான்கோட்டையிலுள்ள இந்திய எண்ணெய்க்கழக நிறுவனத்துக்குச் சென்று கொண்டிருந்தது.
இந்த லாரியை குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டம், ராவெச்சி பகுதியைச் சோ்ந்த அனில் பாா்மா் (60 ) ஓட்டி வந்தாா். இந்த டேங்கா் லாரி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், எறஞ்சி பகுதி திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை காலை வந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதில் டேங்கா் லாரியிலிருந்த எத்தனால் கசிவு ஏற்படத் தொடங்கியதால், வேப்பூா் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் நிகழ்விடம் விரைந்து, தீ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா். மேலும் இரண்டு கிரேன்கள் மூலம் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்த லாரியை மீட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த எடைக்கல் போலீஸாரும் நிகழ்விடம் விரைந்து சென்று, விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் லாரி ஓட்டுநா் தூக்க கலக்கத்தில் கண் அயா்ந்ததால் விபத்து நிகழ்ந்தது தெரிய வந்தது.மேலும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.