என்ன, ஸீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கு தொடங்க முடியுமா?
வங்கிகளில் கணக்குத் தொடங்க வேண்டும் என்றால், ஒவ்வொரு வங்கிக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்தே ஆக வேண்டும் என்ற விதிமுறை வந்துவிட்டது.
ஆனால், சில வங்கிகள் ஸீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்குகளைத் தொடங்க வாய்ப்புகளை வழங்குகின்றன. இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வகை வங்கிக் கணக்கை ஒருவர் ஆன்லைன் மூலமாகவே தொடங்கலாம்.
இதுபோன்ற வங்கிக் கணக்குத் தொடங்குவதற்கு குறைந்தபட்ச வைப்புத்தொகையைச் செலுத்த வேண்டியதில்லை. இதனால் ஏற்ற இறக்கமான வருமானம் உள்ளவர்கள் பயன்பெறலாம்.
அதுபோன்ற பல வசதிகள் இருக்கத்தான் செய்கின்றன.. அவை..
குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ.10 ஆயிரம் என்று வைத்துக் கொள்வோம், ஒருவேளை ஏதோ ஒரு காரணத்தால் இந்தத் தொகை குறைந்துவிட்டால் அதற்காக வங்கிக் கணக்கிலிருந்து அபராதத் தொகை வசூலிக்கப்படும். இது உங்கள் சேமிப்புப் பணத்தைக் குறைத்து தொடர்ந்து அபராதம் வசூலிக்க வழிவகுத்துவிடும்.
ஆனால், ஸீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கு என்றால் இந்த ஆபத்து இல்லை.
கேஒய்சி விண்ணப்பம்
பொதுவாக வங்கிக்கு நேரில் சென்ற கேஒய்சி விண்ணப்பத்தை பூர்த்தி செய்துகொடுக்க முடியாத நிலையில் இருப்பவர்கள் ஸீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கைத் தொடங்கலாம். இதில், விடியோ மூலமாகவே கேஒய்சி பூர்த்தி செய்யும் வாய்ப்பு உள்ளது.
அடிப்படை சேவை மட்டும்
சில வங்கிகள், ஸீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குகளுக்கு பல விதிகளிலிருந்து விலக்கு அளித்து வருகிறது. அதில் கேஒய்சியும் ஒன்று. அதன்படி, குறைந்தபட்ச வங்கிச் சேவை மட்டுமே இதில் பெறலாம். மூத்தக் குடிமக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
வட்டியும் கிடைக்கும்
ஸீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குகளிலும், நீங்கள் சேமிக்கும் பணத்துக்கு குறிப்பிட்ட வட்டியை வங்கிகள் வழங்குகின்றன. எனவே, வெறும் சேமிப்பு மட்டுமல்லாமல் வருமானமும் கிடைக்கிறது.
இன்டர்நெட் பேங்கிங்
ஸீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குக்கும் இன்டர்நெட் பேங்கிக் வசதி வழங்கப்படுவதால் உங்களது அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.
துவக்க வங்கிக் கணக்கு
முதன் முதலாக வங்கியில் கணக்குத் தொடங்குவோர், ஸீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கைத் தொடங்கினால் பயன்படுத்தவும் எளிதாக இருக்கும். வங்கிச் சேவைகளையும் கற்றுக்கொள்ள முடியும்.
யாருக்கெல்லாம் பயனளிக்காது?
நன்மை இருக்கும் அதே வேளையில், சில குறைகளும் இருக்கத்தான் செய்யும். உதாரணமாக, சில ஸீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்குகளுக்கு மாதாந்திர பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையில் வரம்பு நிர்ணயிக்கப்படலாம்
வெறும் இன்டர்நெட் பேங்கிங் வசதி கொண்ட ஸீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு, வங்கியின் இணையதள பராமரிப்பு நாள்களில் வங்கிச் சேவையை பயன்படுத்த முடியாமல் போகலாம்.
ஸீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குகளின் வேறு சில வரம்புகளும் வரையறுக்கப்பட்டிருக்கும் வாய்ப்பு உள்ளதாம்.
ஒரு மாதத்தில் இத்தனை முறைதான் வைப்பு செலுத்தலாம், இவ்வளவு தொகைதான் செலுத்தலாம் என்ற சில வரம்புகள் இருக்கலாம். இது சில வேளைகளில் சிக்கலை ஏற்படுத்தலாம்.
இதுபோல ஸீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கில் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கிறது. பயனாளர் விருப்பப்படி இதனைத் தேர்வு செய்யலாம்.