செய்திகள் :

வரலாற்றில் மிக மோசமான மோசடி.. போலி விமான நிலைய விற்பனை!

post image

போலி அழைப்பு, மின்னஞ்சல் என தற்போது வகைக்கு ஒரு மோசடிகள் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், 1990ஆம் ஆண்டில் நடந்த, வரலாற்றிலேயே இப்படியொரு மோசடி நடந்திருக்காது என்று சொல்லும் அளவுக்கு ஒரு மோசடி நடந்திருக்கிறது. அதுதான் போலி விமான நிலைய விற்பனை.

மோசடி என்றால், ஏமாந்தவர்கள் நஷ்டமடைவது போல, இந்த மோசடியால், ஒரு வங்கியே திவாலாகிப் போனதுதான் துயரம்.

இந்த வழக்கில், 2005ஆம் ஆண்டு நைஜீரியாவைச் சேர்ந்த இம்மானுவேல் நுவ்டே என்பவர் குற்றவாளி என ஃபெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த வழக்கு குற்றச் செயல்கள் தொடர்பான வரலாற்றுப் புத்தகத்தில் 419 மோசடி என்று அடையாளப்படுத்தப்படுகிறது.

1990ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 242 மில்லியன் டாலருக்கு, (இப்போதைய மதிப்பில் ரூ.2,066 கோடி) இல்லாத ஒரு விமான நிலையத்தை இருப்பதாகக் கூறி விற்பனை செய்திருக்கிறார். அதுவும், நைஜீரியாவின் மத்திய வங்கி ஆளுநராக இருந்த பால் ஓக்வுமாவின் பெயரைப் பயன்படுத்தி பிரேசிலிய வங்கியில் மோசடி நடந்திருக்கிறது.

அதாவது, நைஜீரிய மத்திய வங்கி ஆளுநர் என்ற பெயரில், பிரேசிலின் பாங்கோ நோரோஸ்டே வங்கியின் இயக்குநராக இருந்த நெல்சன் சகாகுச்சியுடன் அறிமுகமான நுவ்டே, நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் கட்டப்படாத இல்லவே இல்லாத நுவ்டேவின் கற்பனையில் மட்டும் இருந்த விமான நிலைய திட்டத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யவைத்திருக்கிறார்.

ஆளுநர் என்ற போர்வையில், சகாகுச்சியை, கட்டப்படாத அபுஜா விமான நிலையத்தில் முதலீடு செய்ய வைத்து, அதற்கு 10 மில்லியன் டாலர்கள் கமிஷன் தருவதாகவும் ஏமாற்றியிருக்கிறார்.

இதனால், 191 மில்லியன் டாலர் ரொக்கப் பணத்தையும், 1995 - 98 வரையிலான வட்டியும் சேர்ந்து 242 மில்லியன் டாலர் அளவுக்கு வங்கிக்கு நஷ்டம் ஏற்பட்டது. நுவ்டேவின் சதியில் வீழ்ந்த சகாகுச்சியால், பாங்கோ நோரோஸ்டே வங்கி மீண்டும் எழ முடியாத இழப்பை சந்தித்தது.

இல்லாத விமான நிலையத்துக்கு பல ஆயிரம் கோடி பணத்தை மோசடி செய்ததால், 1990ஆம் ஆண்டுகளில் நடந்த மோசடிகளிலேயே இது மூன்றாவது பெரிய வங்கி மோசடி என்ற அடையாளத்தைப் பெற்றதுடன், இந்த மோசடி காரணமாக, 2001ஆம் ஆண்டில் பாங்கோ நோரோஸ்டே வங்கியே நொடிந்துபோனது.

வரலாற்றில் மிகப்பெரிய மோசடி என அழைக்கப்படும் '419 மோசடி'யை நடத்திய நுவ்டே 2005-ஆம் ஆண்டு ஃபெடரல் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். 25 ஆண்டுகள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

உண்மையில் இந்த 419 என்பது எந்தக் குற்றத்துடனும் தொடர்புடையது அல்ல. நைஜீரியாவில், மோசடிக் குற்றங்களுக்கான குற்றவியல் சட்டப்பிரிவுதான் 419 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது எப்படி?

பாங்கோ நோரோஸ்டே வங்கியை, ஒரு ஸ்பெயின் நாட்டின் மிகப்பெரிய பன்னாட்டு நிதி நிறுவனம் வாங்குவதற்கு ஒப்பந்தம் பேசப்பட்டு வந்தபோதுதான், அந்த வங்கியிலிருந்து ஒரு மிகப்பெரிய தொகை அதாவது, வங்கியின் மூலதனத்திலிருந்து கணிசமான மதிப்பு கொண்ட தொகை கணக்கில் வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்தே, பிரேசில், பிரிட்டன், நைஜீரியா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் புலனாய்வு அமைப்புகளைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. நைஜீரியாவின் பொருளாதாரக் குற்றத் தடுப்பு அதிகாரிகள் நுவ்டேவை கைது செய்தனர். சகாகுச்சி, நியூ யார்க் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக சுவிட்சர்லாந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

இவை எல்லாவற்றையும் தாண்டி, வங்கியைக் காப்பாற்ற, பாங்கோ நோரோஸ்டேவின் உரிமையாளர்களான சைமன்சன் மற்றும் கோக்ரேன் குடும்பத்தினர், 242 மில்லியன் டாலர்களை தாங்களே செலுத்தினர். ஆனாலும் நஷ்டமடைந்தது நஷ்டமடைந்ததுதான், வங்கியால் மீண்டும் எழவே முடியவில்லை, 2001-ஆம் ஆண்டில் அது வீழ்ந்தது. வங்கியின் தலைவிதி முடிவுக்கு வந்தது.

நுவ்டேவின் கூட்டாளி ஒருவர், குற்றத்தை ஒப்புக்கொண்டு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். 25.5 மில்லியன் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர் விசாரணையில் நுவ்டே மற்றும் அவரது மற்றொரு கூட்டாளிக்கு தலா 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

அப்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த பொருளாதார, நிதி குற்றங்களுக்கான ஆணையத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மோசடியாக அது அமைந்திருந்தது. அதிகம் பேசப்பட்டது.

2006ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலையாகி, வெளியே வந்த நுவ்டே, குற்றம் இழைப்பதற்கு முன் தனக்குச் சொந்தமாக இருந்த சொத்துகளை மீட்க நீதிமன்றத்தை நாடினார். அந்த வகையில் சில சொத்துகளையும் மீட்டெடுத்தார். இதையெல்லாம் கடந்து, 2021ஆம் ஆண்டு, நுவ்டே தனக்கும், இந்த விமான நிலைய மோசடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, சட்டக் குழுதான் தன்னை குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்து தண்டனைப் பெற்றுத் தந்ததாகக் கூறியிருந்தது வேறுகதை.

அது என்ன 419 மோசடி?

நைஜீரியாவில் ஏராளமான மோசடியாளர்கள் மக்களை தங்களது வலையில் வீழ்த்த பல்வேறு அஸ்திரங்களைப் பயன்படுத்திக்கொண்டே இருப்பார்கள். மின்னஞ்சல், தொலைபேசி என.. அவற்றை பொதுவாக மக்கள் 419 என்றே அழைக்கிறார்கள். நம் நாட்டில், மோசடி, பிறரது சொத்துகளை அபகரித்தல் தொடர்பான குற்றங்களுக்கான சட்டப்பிரிவு 420 என்பதைக் கொண்டு திருடர்கள், மோசடியாளர்களை 420 என அழைப்பது போல.

டிரெண்ட் ஆகும் டோலோ 650 மாத்திரை! என்ன ஆனது?

எக்ஸ் தளத்தில் திடீரென்று டோலோ 650 மாத்திரை டிரெண்டாகி வருகின்றது.அமெரிக்காவில் பயிற்சி பெற்று வரும் மதுரையைச் சேர்ந்த டாக்டர் பால் என்றழைக்கப்படும் மருத்துவர் பழனியப்பன் மாணிக்கத்தின் பதிவால் டோலோ 65... மேலும் பார்க்க

சொல்வதெல்லாம் சர்ச்சை.. உச்ச நீதிமன்ற கண்டனத்துக்கு உள்ளாகும் நீதிமன்றம்!

"இந்த உயர் நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது. தற்போது, இதே நீதிமன்றத்திலிருந்து வேறொரு நீதிபதி இதுபோன்ற கருத்தைத் தெரிவித்திருக்கிறார். ஏன் இதுபோன்ற கருத்துகள் வெளியிடப்பட வேண்டும்?" என்று உச்ச நீதிமன்றம்... மேலும் பார்க்க