`இது என் தாயார் விருப்பம்’ - 60 வயதில் கட்சி பெண் நிர்வாகியை மணந்த பாஜக மூத்த தலைவர்
மேற்கு வங்க மாநில முன்னாள் பா.ஜ.க தலைவராக இருப்பவர் திலிப் கோஷ். மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பா.ஜ.க-வை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைத்த பெருமை திலிப் கோஷிற்கு உண்டு. 60 வயதாகும் திலிப் கோஷ் தனது சிறிய வயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸுக்காவும், பா.ஜ.கவுக்காவும் பணியாற்றியதால் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை.
இந்நிலையில் தான் திடீரென அவரும் காதல் வயப்பட்டார். அதுவும் பா.ஜ.க பெண் நிர்வாகி ஒருவருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. கட்சியின் பெண் நிர்வாகி ரிங்கு மஜும்தார்(50) என்பவருடன் அவருக்கு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். நேற்று திலிப் கோஷ் முறைப்படி கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

அவருக்கு முதல்வர் மம்தா பானர்ஜி பூங்கொத்து கொடுத்தனுப்பி திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். பா.ஜ.க மாநில தலைவர் சுகந்தா மஜும்தார் நாள் முழுவதும் கூடவே இருந்து திருமண வேலைகளை செய்து கொடுத்தார். இது குறித்து திலிப் கோஷ் கூறுகையில்,''எனது தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். எங்களுக்கு ஆசிர்வாதம் வழங்கிய முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்'' என்று தெரிவித்தார். ரிங்கு மஜும்தாருக்கு இது இரண்டாவது திருமணமாகும். முதல் திருமணத்தின் மூலம் ரிங்குவிற்கு ஒரு மகன் இருக்கிறார்.
நட்பு உருவானது எப்படி?
ரிங்குவும், திலிப் கோஷும் 2021ம் ஆண்டு முதல் முறையாக கார்டன் ஒன்றில் நடைபயிற்சியின் போது சந்தித்துக்கொண்டனர். இந்த சந்திப்பு படிப்படியாக அவர்களுக்குள் நட்பை உருவாக்கியது. சமீபத்தில் கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை இருவரும் சேர்ந்து பார்த்தபோதுதான் இருவரும் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்ததாக இருவரும் தெரிவித்தனர். ரிங்குதான் முதல் முறையாக திருமணம் செய்து கொள்ளலாமா என்று திலிப் கோஷிடம் கேட்டார். இது குறித்து ரிங்கு கூறுகையில்,'' திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவரிடம் சொன்னபோது முதலில் அவர் சம்மதிக்கவில்லை.

ஆனால் அதன் பிறகு அவர் திருமணத்திற்கு சம்மதித்தார். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது''என்றார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் திலிப் கோஷிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தேனிலவு எங்கு என்று திலிப் கோஷிடம் கேட்டதற்கு நாட்டில் எங்காவது நடக்கும் என்று தெரிவித்தார். இத்திருமணத்தில் மாநில எதிர்க்கட்சி தலைவர் சுவந்து அதிகாரி பங்கேற்காமல் தவிர்த்துவிட்டார்.