ரூ.8,346 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத எம்.டி.என்.எல்!
`அவருடன்தான் வாழ்வேன்’ - கைகொடுக்காத 12 மணிநேர கவுன்சிலிங்; வருங்கால மருமகனுடன் சென்ற பெண்
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரை சேர்ந்தவர் சப்னா தேவி. இவரின் மகளுக்கு கடந்த 16ம் தேதி திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த 8-ம் தேதி சப்னா தேவி தனது மகள் திருமணம் செய்ய இருந்த எதிர்கால மருமகன் ராகுலுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். உத்தரப்பிரதேசத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து சப்னா தேவியின் கணவர் ஜிதேந்திர குமார் போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் அவர்கள் இரண்டு பேரையும் போலீஸார் தேடி வந்தனர். போலீஸார் தேடுவதை தொடர்ந்து இருவரும் திரும்ப வந்து போலீஸில் சரணடைந்தனர்.
போலீஸார் சப்னா தேவியிடம் மீண்டும் அவரது குடும்பத்தோடு சேர்ந்து வாழும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால், தான் மீண்டும் தனது வீட்டிற்கு செல்ல மாட்டேன் என்றும், தனது கணவரும், மகளும் தனக்கு மனரீதியாக மிகுந்த சித்ரவதை கொடுத்து வந்தனர் என்றும் தெரிவித்தார்.

12 மணி நேரம் கவுன்சிலிங்
இதையடுத்து இரண்டு பேரையும் ஒன்றாக வைத்து போலீஸ் நிலையத்தில் போலீஸார் 12 மணி நேரம் கவுன்சிலிங் செய்தனர். போலீஸார் சொன்ன எதையும் கேட்கும் மனநிலையில் சப்னா தேவி இல்லை. தனது எதிர்கால மருமகனுடன் தொடர்ந்து வாழ்வேன் என்று சப்னா தேவி பிடிவாதமாக தெரிவித்தார். போலீஸாரால் அவரது மனதை மாற்ற முடியவில்லை.
சப்னா தேவியிடம் அவரது கணவர் மற்றும் மகளிடமும் பேச வைத்தனர். அப்படி இருந்தும் சப்னாவின் மனதை மாற்ற முடியவில்லை. இதையடுத்து `எப்படியும் போங்கள்’ என்று கூறி இரண்டு பேரையும் அனுப்பி வைத்துவிட்டனர். இதையடுத்து சப்னா தேவி ராகுலுடன் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளார்.
இது குறித்து ராகுல் கூறுகையில், ``சப்னாவின் உயிரை காப்பாற்றி இருக்கிறேன். இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்திருக்கிறோம்” என்றார். இது குறித்து சப்னாவின் மகள் கூறுகையில்,''நான் ஏப்ரல் 16-ம் தேதி திருமணம் செய்து கொள்ள இருந்தேன். ஆனால் எனது தாயார் ராகுலுடன் சென்றுவிட்டார். கடந்த 3 முதல் 4 மாதத்தில் எனது தாயாரும், ராகுலும் அடிக்கடி போனில் பேசுவார்கள். வீட்டில் ரூ.3.5 லட்சம் பணமும், ரூ.5 லட்சம் மதிப்பு தங்க நகைகளும் வைத்திருந்தோம். அதனை எடுத்து சென்றுவிட்டனர். அவர் கேட்டதால் 10 ரூபாய் கூட விட்டு வைக்காமல் அனைத்தையும் எனது தாயார் எடுத்துச்சென்றுவிட்டார்.
அவர்(தாயார்) என்ன செய்ய வேண்டுமோ செய்யட்டும். எங்களுக்கு கவலையில்லை. ஆனால் பணம் மற்றும் தங்க நகைகளை திரும்ப கொடுக்கவேண்டும்''என்றார். சப்னாவின் கணவர் ஜிதேந்திரா இது குறித்து கூறுகையில், `இருவரிடமிருந்து நகை, பணத்தை வாங்காமல் விடமாட்டோம்’ என்றார்.