மேல்பாதி திரெளபதி அம்மன் வழிபாடு: ஆதிக்க சக்திகளை புறக்கணிக்க சிபிஎம் வேண்டுகோள்!
சென்னை: திரெளபதி அம்மன் கோவில் விவகாரத்தில், ஆதிக்க சக்திகளை மக்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளாா்.
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் பழமையான திரவு பதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2023 ஆம் ஆண்டு பட்டியலின மக்கள் வழிபாடு செய்வதற்கு முயற்சித்த போது, அதற்கு எதிராக சாதி ஆதிக்க சக்திகளின் தூண்டுதலால் வன்முறை நடைபெற்றது. இந்த நிலைமையை மாற்றியமைத்து, அனைத்து தரப்பாரும் கோயிலில் வழிபாடு நடத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டுமென 22 மாதங்களாகவே பலகட்ட போராட்டங்களும், பேச்சுவார்த்தைகளும் நடந்து வந்தன. நீதிமன்றத்திலும் வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில், கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தது.
அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி: எம்.ஏ.பேபி விமா்சனம்
இவ்வழக்கில். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கோயில் திறக்கப்பட்டு, அனைத்து தரப்பு மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உறுதி செய்யப்பட்டது. ஏராளமான பட்டி யல் சமூக மக்கள் அம்மனை வழிபாடு செய்தனர். ஆனால், சாதி ஆதிக்க எண்ணம் கொண்டோர் சிலரின் தூண்டுதலால், இந்த வழிபாட்டுக்கும் மீண்டும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், பட்டியல் சாதி மக்கள் வழிபட்டதால் கோயிலின் புனிதம் கெட்டுப்போனதாகவும், இனிமேல் தாங்கள் அம்மனை சென்று வழிபட மாட்டோம் என்றும் சிலர் பேசியதுடன், கடந்த 3 நாட்களாக திரவுபதி அம்மனை வழிபட மறுத்து, கோயிலை ஒதுக்கி வைக்கும் போக்கும் தொடர்கிறது.
கோயிலுக்கு சென்று இறை வழிபாடு செய்வது அனைத்து சாதி மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகும். இதனை மறுத்து, பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பதும், கோயிலுக்குள் அவர்கள் வந்துவிட்டதால் கோயிலையே புறக்கணிப்பதும் சாதி வெறியின் வெளிப்பாடாக உள்ளது.
இறை வழிபாட்டில் அனைத்து மக்களும் சமமே என்பதை ஏற்க மறுத்து, சாதி ஆதிக்க எண்ணத்தை கொம்பு சீவி விடும் சக்திகளை மக்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும்.
நீதிமன்ற உத்தரவுக்கும், அரசமைப்பு உரிமைக்கும் மாறாகச் செயல்படும் சக்திகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.