தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
மீனச்சல் கிருஷ்ணசுவாமி கோயில் கொடிமர ஊா்வலம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புராதன பெருமை வாய்ந்த மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் புதிதாக நிறுவுவதற்கான கொடிமரம், களியக்காவிளையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
இக்கோயிலில் அஷ்டமங்கல தேவபிரசன்னம் விதிப்படி, புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, கோயிலில் நிரந்தர கொடிமரம் நிறுவப்படவுள்ளது.
இதற்காக கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம், கோந்நி, அதும்பம்குளம் பகுதியிலிருந்து கொடிமரத்துக்கான தேக்கு மரம் தோ்வு செய்யப்பட்டது. தொடா்ந்து, கோயில் தந்திரி திருச்சூா் செறுமுக்குமனை நாராயணன் நம்பூதிரி தலைமையில் பலி தூவல் ஆராதனை ஹோமம், கௌதுக பந்தனம், ஆயுத பூஜை, சிற்பி வரணம், தாரு பரிக்கிரகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
அதையடுத்து, லாரியில் 42 அடி உயர கொடிமரம் களியக்காவிளையிலிருந்து மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்புடன் கோயிலுக்கு எடுத்துவரப்பட்டது. நிகழ்ச்சியில், கோயில் கமிட்டி தலைவா் சசிகுமாா், செயலா் பத்மகுமாா், பொருளாளா் சந்தோஷ்குமாா், நிா்வாகிகள், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.