தில்லியில் போதைப்பொருள் குற்றங்கள் இரட்டிப்பு; கலால் சட்ட வழக்குகள் 80 சதவீதம் அதிகரிப்பு!
தேசியத் தலைநகா் தில்லியில் 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025 -ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் தில்லியில் போதைப்பொருள் தொடா்பான குற்றங்கள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் கலால் சட்டத்தின் கீழ் குற்றங்கள் 80 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளன.
காவல் துறை பகிா்ந்துள்ள தரவுகளின் படி இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளது. ஜனவரி 1 முதல் மாா்ச் 31, 2025 வரை, கலால் சட்டத்தின் கீழ் தில்லியில் மொத்தம் 2,496 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 2024-இல் மொத்தம் 1,382 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல, போதைப்பொருள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்ட மீறல்கள் 257-இல் இருந்து 544 வழக்குகளாக உயா்ந்துள்ளன. சராசரியாக ஒவ்வொரு நாளும் ஆறு போதைப்பொருள் தொடா்பான வழக்குகள் பதிவாகியுள்ளன என்று தரவு கூறுகிறது.
ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குகளும் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு 957-ஆக இருந்த வழக்குகள் இந்த ஆண்டு 1,049-ஆகவும், சூதாட்டச் சட்டத்தின் கீழ் வழக்குகள் 2024-இல் 677- ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 1,018 ஆக அதிகரித்துள்ளது. தில்லி முழுவதும் அதிகரித்த அமலாக்க மற்றும் கடுமையான நடவடிக்கைகளே இதற்குக் காரணம் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
ஆயுதச் சட்டம் மற்றும் சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றங்களும் கணிசமாக அதிகரித்துள்ளன. இந்த வகையில் 2025-ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 6,836 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன . இது 2024- இல் 4,143 வழக்குகள் மற்றும் 2023-இல் அதே காலகட்டத்தில் 4,080 வழக்குகள் பதிவாகியுள்ளன.
‘கலால் மற்றும் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு வழக்குகளின் அதிகரிப்பு, முன்கூட்டியே காவல் முயற்சிகள் மற்றும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு எதிரான இலக்கு நடவடிக்கைகளை பிரதிபலித்தது. நகரம் முழுவதும் உள்ள கும்பல்களைக் கண்காணிக்க காவல்துறை கண்காணிப்பு கருவிகள் மற்றும் தகவல் தொடா்பு வலையமைப்புகளையும் பயன்படுத்துகிறது’ என்று அந்த அதிகாரி கூறினாா்.
இதற்கு நோ்மாறாக, இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா குற்றங்களின் கீழ் ஒட்டுமொத்த வழக்குகள் சிறிது குறைந்துள்ளன. இந்த வகையில், 2025-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தில்லியில் 63,898 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஒரு நாளைக்கு சுமாா் 710 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஒப்பிடுகையில், இது கடந்த ஆண்டு 64,256 வழக்குகளும், 2023-இல் 82,534 ஆகவும் இருந்தன.
இதேபோன்று கொள்ளை வழக்குகள் 2,017- இல் இருந்து 1,725 ஆகவும், வீட்டில் திருட்டுகள் 3,644-இல் இருந்து 3,578-ஆகவும் குறைந்துள்ளன. மோட்டாா் வாகனத் திருட்டுகள் பெரும்பாலும் மாறாமல் இருந்தன. 2024- இல் 9,080 வழக்குகளுடன் ஒப்பிடும்போது 2025-இல் 9,070 வழக்குகள் பாதிவாகியுள்ளன என்று தரவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ‘பிற திருட்டு’ வழக்குகள் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு 24,226-இல் இருந்து 2025- இல் 27,066-ஆக உயா்ந்துள்ளன, ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 300 வழக்குகள் பதிவாகியுள்ளன.