`போதைப்பொருள் சப்ளை, பாலியல் தொல்லை புகார்' - நடிகர் ஷைன் டோம் தாமஸ் சினிமாவில் நடிக்க தடை?
கேரள கொச்சி கலூரில் உள்ள ஓட்டலில் போதைப்பொருள் விற்கும் கும்பல் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த புதன்கிழமை இரவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்.
அதில் போதைப்பொருள்கள் விற்கும் கும்பலைச் சேர்ந்த மலப்புறத்தைச் சேர்ந்த அஹம்மது முர்ஷாத்(25) என்பவர் கைது செய்யப்பட்டார். அப்போது ஓட்டலின் 3-வது மாடியில் தங்கியிருந்த நடிகர் ஷைன் டோம் சாக்கோ போலீஸிடம் சிக்காமல் இருக்க இரண்டாவது மாடியில் குதித்ததுடன், அங்கிருந்து முதல் மாடியில் உள்ள நீச்சல் குளத்தில் குதித்து தப்பி ஓடினார்.

அவர் தப்பிச் செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பாதிவாகி இருந்தது. இதையடுத்து போதைப்பொருள் விற்பனை குறித்த ஆதாரங்களை அழிக்கும் விதமாக ஷைன் டோம் சாக்கோ தப்பி ஓடியதாக கொச்சி நார்த் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து ஷைன் டோம் சாக்கோ தனது வழக்கறிஞருடன் கடந்த சனிக்கிழமை காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், போதை பொருள்கள் சப்ளை கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
முதலில் குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஷைன் டோம் சாக்கோ. ஷைன் டோம் சாக்கோ-வின் வங்கி கணக்குகள் மற்றும் வாட்ஸ்அப் சாட் ஆகியவற்றை ஆய்வு செய்தபோது அவர் போதைப்பொருள் விற்கும் கும்பலுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.
மலையாள சினிமா நடிகர்களுக்கு போதைப்பொருள்கள் சப்ளை செய்யும் நெட்வொர்க்கில் சினிமா துறையைச் சேர்ந்த சிலரும் உள்ளதாகவும். தானும் மற்றொருவரும் மட்டுமே பழிக்கு ஆளாகியுள்ளோம் எனவும் ஷைன் டோம் சாக்கோ வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஷைன் டோன் சாக்கோ-விடம் இருந்து போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படவில்லை என்பதால் போலீஸார் அன்று மாலை அவரை ஜாமினில் விடுவித்தனர்.

இந்த நிலையில் இன்று மாலை 3 மணிக்கு நடக்க உள்ள கேரளா பிலிம் சேம்பர் ஆஃப் மானிட்டரிங் மீட்டிங்கில் ஷன் டோம் சாக்கோ சினிமாவில் நடிக்க தடை விதிக்கும் தீர்மானம் கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொன்னாணி பகுதியில் நடந்த சினிமா படபிடிப்புக்கு இடையே ஷைன் டொம் சாக்கோ தன்னிடம் மோசமாக நடந்துகொண்டதாகவும், பெண்மையை களங்கப்படுத்தும் விதமாக நடந்துகொண்டதாகவும் நடிகை வின்ஸி அலோஸியஸ் கூறிய புகார்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் மலையாள சினிமா நடிகர்கள் சங்கமான அம்மா, பெப்கா உள்ளிட்ட சினிமா சார்ந்த அமைப்புகளைச் சேர்ந்த 21 நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
