இரக்கம், எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்தவர் போப் பிரான்சிஸ்! - பிரதமர் மோடி இரங்க...
மகாராஷ்டிரப் பள்ளிகளில் ஹிந்தி சேர்ப்பு: மாநில மொழி ஆலோசனைக் குழு எதிர்ப்பு!
மகாராஷ்டிரத்தில் பள்ளிகளில் 3 ஆவது மொழியாக ஹிந்தி சேர்க்கப்பட்டுள்ளதற்கு அந்த மாநில மொழி ஆலோசனைக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ், மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சிவசேனை(யுபிடி) கட்சி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 3 ஆவது மொழியாக ஹிந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது கல்விரீதியாக நியாயமற்றது என்றும் இது மாணவர்களின் உளவியல் நலனுக்கு ஏற்றது அல்ல என்றும் மகாராஷ்டிர மாநில மொழி ஆலோசனைக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் தேவேந்திர பட்னவீஸுக்கு எழுதியுள்ள கடிதத்தில் "மகாராஷ்டிரத்தில் கல்வியில் ஹிந்தியைத் திணிப்பது மாநிலத்தின் பின்னடைவுக்கு வழிவகுக்கும். கல்வி ரீதியாக இது நியாயப்படுத்தப்படவில்லை. இது அறிவியல் ரீதியானதும் அல்ல. மேலும் மாணவ, மாணவிகளை உளவியல் ரீதியாக பாதிக்கும், அவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
எனவே, மகாராஷ்டிரத்தில் 12 ஆம் வகுப்பு வரையிலும் மராத்தி, ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை மட்டும் இருக்க வேண்டும். மாநில கல்வித் துறை இதுதொடர்பாக முடிவு எடுப்பதற்கு முன்னதாக எங்களுடன் ஆலோசித்திருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக்கொள்கைக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | இந்திய தேர்தல் அமைப்பில் தவறு இருக்கிறது: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு!