Travel Contest: "ஆண்டுக்கு 75 முறை மின்னல் தாக்கும்" - காற்றில் அசையும் டவர்; கனடா சுற்றுலா அனுபவம்!
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்.
கனடா செல்பவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று டொராணோ நகரில் உள்ள சி.என்.டவர் என்று சொல்லப்படும் கனடா நேஷனல் டவர்.
ஆங்கிலத்தில் டொராண்டோ என்று எழுதினாலும், சரியான உச்சரிப்பு டொராணோ என்கிறார்கள் கனடா நாட்டு மக்கள்.
டொராணோ நகரைச் சாலை வழியாகவோ அல்லது ரயில் மார்க்கமாகவோ நெருங்கும் போது, வானுயர உயர்ந்திருக்கும் இந்தக் கோபுரத்தைக் காணலாம். இந்த கோபுரத்தின் மொத்த உயரம் 553 மீட்டர் (1815 அடிகள்).
1973 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு 1976ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு பொது மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்ட இந்தக் கோபுரம், சுமார் 34 வருடங்கள் உலகத்தின் மிக உயரமான கோபுரம் என்ற புகழைப் பெற்றிருந்தது.
2010ஆம் வருடம். துபாயின் புர்ஜ் காலிஃபா அந்தப் பெருமையைத் தட்டிச் சென்று விட்டது.

இந்தக் கோபுரத்தைக் கனடாவின் தொலைத்தொடர்பு கோபுரம் என்றும் சொல்லலாம். பதினேழு கனடா தொலைக்காட்சி மற்றும் எஃப்.எம் நிலையங்களின் செயல்பாட்டிற்கு இந்த கோபுரம் உதவுகிறது.
கனடாவின் முக்கியமான சுற்றுலாத் தலமாகப் பார்க்கப்படும் இந்த கோபுரத்திற்கு, வருடத்திற்குச் சுமார் இரண்டு மில்லியன் (இருபது இலட்சம்) சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.
கோபுரத்தின் மேல்பகுதியிலிருந்து டொரோணா நகரையும் அதன் சுற்றுப் புறங்களையும் பார்ப்பதற்கு இரண்டு பார்வை மேடைகள் உள்ளன.
முதல் மேடை 346 மீட்டர் (1136 அடிகள்), 113 அடுக்கு மாடிகள் உயரம் என்று சொல்லலாம்.
கண்ணாடி மேடை (க்ளாஸ் ஃப்ளோர்) என்ற பெயர் கொண்ட இந்தப் பார்வை மேடையின் சுவர்கள் கண்ணாடியினால் ஆனவை.
பார்வை மேடையை அடைவதற்கு 11 எலிவேட்டர்கள் உள்ளன. நான்கு பக்கங்களும் கண்ணாடிச் சுவர்களால் ஆன எலிவேட்டரின் வேகம் மணிக்கு 22 கிலோ மீட்டர்.
அதாவது, கீழ்த்தளத்திலிருந்து முதல் பார்வை மேடைக்கு, எலிவேட்டர் 58 வினாடிகளில் கொண்டு சேர்க்கிறது.

இன்னும் அதிகமான உயரத்தில் சென்று பார்க்க விரும்புபவர்களுக்கு “ஸ்கைபாட்” என்று இன்னொரு பார்வை மேடை.
அதன் உயரம் 447 மீட்டர் (1465 அடிகள்), 147 அடுக்கு மாடிகள் உயரம். இங்கு நின்று பார்க்கும் போது காற்றில் கோபுரம் லேசாக அசைவதை உணர முடியும்.
சுமார் அரை மீட்டர் கோபுரம் காற்றில் அசைகிறது. வட அமெரிக்கப் பகுதியில், அதிக உயரத்தில் அமைந்துள்ள பார்வை மேடை “ஸ்கைபாட்” மட்டும்தான்.
வானம் மேகமூட்டம் இல்லாமல் இருக்கும் போது, 160 கிமீ. தூரம் வரை, அதாவது நயாகரா நீர்வீழ்ச்சி, மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் வரை பார்க்க முடியும்.
வருடத்திற்கு 75 முறை இந்த கோபுரத்தை மின்னல் தாக்குவதாகக் கூறுகிறார்கள்.

ஸ்பைடர் மேன் போலக் கோபுரத்திலிருந்து தொங்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு “எட்ஜ் வால்க்” (கோபுரத்தின் விளிம்பில் நடப்பது) என்ற வசதியுண்டு.
அதாவது கோபுரத்திற்கு வெளிப்புறத்திலுள்ள கூரையில் தொங்கிய படி நகரைப் பார்க்கலாம். உயரம் 356 மீட்டர், (1168 அடிகள்), 116 அடுக்கு மாடிகள் உயரம். பாதுகாப்பிற்கான சகல உபகரணங்களுடன் தொங்கியபடி நகரைப் பார்க்கலாம்.
இந்த கோபுரத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் மற்றொரு அம்சம் “360 ரெஸ்டாரண்ட்” என்ற சுழலும் சிற்றுண்டிச் சாலை. எழுபத்திரண்டு நிமிடங்களில் இந்த சிற்றுண்டிச் சாலை ஒரு முழுச்சுற்றை முடிக்கிறது.
அமர்ந்து உணவருந்தியபடியே, விண்ணைத் தொடும் கட்டிடங்கள் நிறைந்த டொரோணா நகரின் அழகை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் கண்டு ரசிக்கலாம்.

இந்த கோபுரத்தின் கூரையில் எல்.சி.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கணினியின் கண்காணிப்பில் மிளிரும் இந்த விளக்குகள் 16.7 மில்லியன் வண்ணங்களைக் கொடுக்கும் வகையில் வடிவமைத்துள்ளார்கள்.
தினமும், இரவில் இந்த அலங்கார விளக்குகள் ஒளியூட்டப்படுகின்றன. அதைத் தவிர முக்கியமான நாட்களில் விளக்குகள் ஒளியூட்டப்படும்.
தீபாவளி, ஹோலி ஆகிய இந்தியப் பண்டிகைகளுக்குக் கண் கவரும் எல்.சி.டி விளக்குகளைக் காணலாம்.
சி.என்.டவரின் கீழ்ப் பகுதியில் பெரிய நினைவுப் பரிசுக் கடை இருக்கிறது. இந்த அற்புதமான கோபுரத்திற்கு வந்ததன் நினைவுச் சின்னமாக வாங்க எண்ணற்ற வகையான பரிசுப் பொருட்கள் குவிந்துள்ளன.
கனடா செல்பவர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடங்களில், சி.என். டவரும் ஒன்று என்று சொல்லலாம்.
- கே.என்.சுவாமிநாதன்.
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.