செய்திகள் :

Travel Contest : யானையா, யானைக்கூட்டமா? - வெள்ளியங்கிரி மலையில் ஏற்பட்ட திக் திக் சிரிப்பனுபவம்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

பச்சை பசேலென்ற காடு, ரோமம் சிலிர்க்கும் குளிர், கண்ணைக்கவரும் காட்சிகள், மறக்க முடியா மனிதர்கள், வியக்க வைக்கும் பொய்கள், கண் கலங்குமளவிற்கு சிரிப்பு. இவைதான் என்னில் நீங்காமல் இருக்கும் வெள்ளியங்கிரி மலை ஏறிய அனுபவத்தின் நினைவுகள்.

எனது வாழ்க்கையில் சுவாரசியமான அனுபவம் எனச் சொல்லிக்கொள்ளத் தகுதியான பயணம் அது. சிரிப்பலையால் நிறைந்திருந்த அந்த நாளில் அரங்கேறிய மிகவும் பயங்கரமான, மோசமான சம்பவத்தை, எனது வாழ்வின் மிக முக்கிய பாடத்தைக் கற்றுத்தந்த அந்த சம்பவத்தை மலையேற விரும்புபவர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டுமென நினைக்கிறேன்.

வெள்ளியங்கிரி மலை

வெள்ளியங்கிரி மலை. கோயம்புத்தூரிலிருந்து கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த இடம், மொத்தம் ஏழு மலைகளைக் கொண்டது.

கடைசி மலையில் ஒரு குட்டி கோயில் குடிகொண்டுள்ளது. அது சக்திவாய்ந்த சாமி என சிலர் சொல்வதையும் கேள்விப்பட்டேன். ஆனால் அதைப் பார்ப்பதற்காக நான் போகவில்லை. அப்போது நான் ஒரு அக்மார்க் நாத்திகன். ‘பெரியாரின் பேரன்’ என ஸ்டேட்டஸ் போடும் ஆள்.

நான் மலையேற விரும்பியதற்குக் காரணம், அந்த மலையை ஏறி முடிக்க ஒரு முழு இரவு தேவைப்படுமாம்! உடல் மொத்தமும் களைப்பாகி நிற்கவே தெம்பில்லாத அளவுக்கு கஷ்டப்பட்டு மலையேறி விடியற்காலையில் மலையின் உச்சியை அடைந்தால், மேகமுரசும் உயரத்தில் சூரிய உதயத்தைக் கண்டுகளிக்கலாம்! எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அந்த விடியல் மனதில் ஒரு சிறிய துளிர்ப்பைத் தரும் என்ற நம்பிக்கையிலேயே அங்கு செல்ல முடிவு செய்தேன். 

வெள்ளியங்கிரி மலை!

வருடத்தில் ஒன்று, இரண்டு மாதங்களில் மட்டுமே மக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் இந்த மலையில் ஏற பெண்களுக்கு எப்போதும் அனுமதி இல்லை. மற்ற மாதங்களில் காட்டு விலங்குகளுகளின் இனப்பெருக்கத்திற்காகவும் மற்றபிற காரணங்களுக்காகவும் அனுமதி மறுக்கப்படுகிறது.

2019 மே 25 ஆம் நாள்.

அப்போது எனக்கு 19 வயது! பள்ளியிலிருந்து கல்லூரிக்கு மாறியிருந்தாலும் இன்னும் மெச்சூரிட்டி எட்டாத வயதுதான். இராமநாதபுரத்திலிருந்து நானும் எனது கோவை நண்பர்கள் 5 பேருமாக அந்த மலையேற முடிவு செய்தோம்.

கோயம்புத்தூரில் பஸ் ஏறி இரவு 8 மணிக்கெல்லாம் வெள்ளியங்கிரி மலைக்கு வந்து சேர்ந்தோம். கையில் முன்னேற்பாடாய் கால் வலிக்கும்போது ஊன்றிக்கொள்ள ஆளுக்கொரு கம்பும், முதுகில் தின்பண்டமும் தண்ணீரும் கொண்ட பைகளையும் மாட்டிக்கொண்டு முதல் மலைச்சரிவில் பயணத்தை ஆரம்பித்தோம்.

வெள்ளியங்கிரி மலை

கிண்டலும் கேலியுமாக குதூகலத்தில் மூன்று மலைகளைக் கடந்த எங்களுக்கு நான்காவது மலையிலிருந்து நாக்குத் தள்ள ஆரம்பித்தது.

இரவு 12 மணிக்குமேல் இருக்கும், அனைவரும் தெம்பு குறைவதை உணர்ந்து மெதுவாக நடந்துகொண்டிருந்தோம். வழியில் பாம்பு ஒன்றைப்பார்த்து பயத்திலும் நண்பர்களோடிருந்த தைரியத்தில் வந்த சிரிப்பிலும் அதைக் கடந்து வந்தோம். பயணம் சுவாரசியமாகவே இருந்ததால் களைப்பு கடுசாகத் தெரியவில்லை.

நான்காவது மலையின் உச்சியை அடைந்ததும், அங்கிருந்து கீழே தெரிந்த நகரைப் பார்த்தோம். அது எந்த ஊர் எனத் தெரியவில்லை. இருட்டில் எங்களைக் கடந்து சென்ற அண்ணன் ஒருவர் கோவைதான் எனச் சொல்லிச் சென்றார். எந்த ஊராய் இருந்தால் என்ன? கண்ணில் பட்ட அழகு, எங்கள் முழு களைப்பையும் களையெடுத்தது.

அந்த இரவில், 7 ஆவது மலையிலிருந்து யாரோ கை நிறைய வெளிச்சத்தை அள்ளித் தூவிவிட்டதுபோல் இருந்தது மாநகரம். கண்ணுக்கெட்டிய தூரமிருந்த அந்த வெளிச்சப்புள்ளிகள், உலகின் விளிம்பில் வானத்தைத் தொட்டு பின் நட்சத்திரப்புள்ளிகளாக படர்ந்தது போலத்தெரிந்தது. அந்த பிரமிப்பூட்டும் அழகு எங்கள் முகத்தில் நாங்களே அறியாத புன்னகையைத் தந்தது.

வெள்ளியங்கிரி மலை.

அவசரப்பட்டு ஏறிவிட்டோமோ? எனத் தோன்றிய எண்ணங்களும் அந்த நான்காவது மலைக் குளிர்காற்றில் பறந்தோடின. சிறிதுநேரம் அங்கேயே நின்று ரசித்துவிட்டு, அடுத்து எங்களுக்காக காத்திருந்த பயங்கரத்தை அறியாமல் ஐந்தாவது மலையை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

ஐந்தாவது மலையில், இருபக்கமும் காடு சூழ்ந்த ஒரு சரிவில் ஏற ஆரம்பித்தோம். கையில் செல்போன் டார்ச்-களோடு பேசிக்கொண்டே நடந்தோம்.

எங்களோடு முன்னாலும் பின்னாலும் ஒரு சிலர் சற்று தள்ளி இருட்டில் வந்துகொண்டிருந்தார்கள். எல்லோரும் குளிரில் காதை மறைக்குமளவில் துணிகளை இறுக்கிக் கட்டியிருந்தோம். அந்தத் துணியைத் தாண்டி எங்கள் காதில் ஒரு சத்தம் கேட்டது. முன்னால் நடந்துகொண்டிருந்த அனைவரும் ஒரு கணம் சட்டென நின்று காட்டிற்குள் ஊடுருவிப்பார்த்தனர்.

நாங்கள் 6 பேரும் அவர்களைப் பார்த்து நின்றோம். திரும்பிப் பார்த்தால், பின்னால் வந்தவர்களும் ஆடாமல் அசையாமல் நின்றுகொண்டிருந்தனர். சில நொடிகள் யாரும் பேசிக்கொள்ளவில்லை. மீண்டும் அந்தச் சத்தம் கேட்டது. எங்களுக்குள் சிரித்துக்கொண்டிருந்த நாங்களும் இப்போது பரபரப்பாகிவிட்டோம்.

காட்டிற்குள் உற்றுப் பார்த்தோம், மீண்டும் அந்த சத்தம் கேட்குமா என ஆடாமல் அசையாமல் நின்றோம். மிகவும் அமைதி. அந்த சத்தம் மீண்டும் கேட்கவில்லை. பதிலாக, எங்கள் பின்னால் இருந்த ஒரு அண்ணன் "யானை" என மெதுவாகச் சொல்லும் சத்தம் கேட்டது. சட்டென மீண்டும் அது கத்தும் சத்தம் கேட்டது.

எல்லோரும், உடனே படபடவென கீழே உட்கார்ந்துகொண்டனர். நாங்களும் பயத்தில் கீழே உட்கார்ந்தோம். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம். பின்னால் வந்துகொண்டிருந்த இருட்டில் முகம் தெரியாத அந்த அண்ணன், எங்கள் மீது அக்கரைகொண்டு மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார்.

"யாரும் அசையாதீங்க, சத்தம் போடாதீங்க, போன் லைட் எல்லாம் அமத்துங்க. கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. முன்னாடி இருக்குறவங்கள்ட்ட அப்புடியே சொல்லுங்க"என்றார். என் நண்பன் அவர் சொன்னதை மெதுவாக முன்னாலிருப்பவர்களிடம் சொன்னான்.

எங்களோடு சேர்த்து அந்த இடத்தில் ஒரு 15 பேருக்குள்தான் இருந்தோம். உயிருக்கு பயந்து, பதட்டத்தில் அமைதியாக இருந்தோம். எல்லா பக்கமும் இருள் சூழ்ந்திருந்தது. நான் யானை கண்ணில் படுகிறதா என பயத்தில் தேடினேன். அந்த கும்மிருட்டில், பயத்தில் எனக்கு எதைப்பார்த்தாலும் யானைபோல் தெரிந்தது. அதில் எது யானை? அல்லது அனைத்தும் யானையா? தூரத்தில் நிற்பது யானைக்கூட்டமா? என ஒன்றும் எனக்குப் புரியவில்லை. அந்தக் குளிரிலும், பயம் என் முகத்தில் வியர்வை சுரப்பிகளை வேலை செய்ய வைத்தது.

யானை எங்களைத்தாக்க ஓடிவந்தால் எங்குபோய் ஒளியலாம், எதில் ஏறலாம் எனத் தேடினான். கீழே உட்கார்ந்துகொண்டு எந்த நல்ல இடத்தையும் கண்டுபுடிக்க முடியவில்லை. என் நண்பனுக்கு மண்டையில் என்னப் பிரச்னையோ தெரியவில்லை, மெதுவாக எழுந்து சத்தம் வந்த திசையில் பார்த்தான்.

அவன் யானையைப் பார்ப்பதற்கு முன்னால், யானை அவனைப் பார்த்துவிட்டால் எங்கள் கதி கந்தல்தான். அவனைச் சத்தமாக கூப்பிட பயந்து அவன் சட்டையை எட்டிப் பிடித்து கீழே இழுக்க முயற்சித்தேன். சட்டை எட்டவில்லை. பின்னாலிருந்த அந்த முகம் தெரியாத அண்ணன் மெதுவாக சத்தம்போட்டு அவனை அதட்டினார். அவன் சட்டென உட்கார்ந்தான். அவர் போட்ட சத்தம் கேட்டுவிட்டதோ என்னவோ யானை மீண்டும் ஒலி எழுப்பியது.

அந்த ஒலி நாம் படங்களில் கேட்கும் யானை சத்தம்போல் இல்லை. இது சற்று வித்தியாசமாக, அடி வயிற்றிலிருந்து கோவத்தில் கத்துவதுபோல் இருந்தது.

என் மனம் பதட்டத்தில் பல கணக்குகளைப் போட்டது. ஒருவேளை இது மதம்பிடித்த யானையோ, பசியில் இருக்கும் யானையோ என்றெல்லாம் அந்த புதிய யானை ஒலிக்கு அர்த்தம் தேடினேன். மதம், பசி எதுவாக இருந்தாலும் நாங்கள் வீடு திரும்பப்போவதில்லை என்பதை நன்றாக அறிந்தேன். கத்தும் சத்தம் மட்டும் இல்லாமல் அது தரையில் கிடக்கும் இலைகளை மிதித்து நடக்கும் சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தது.

நாங்கள் பயத்தில் பல எண்ணங்களில் ஆழ்ந்திருந்த போது அந்த அண்ணன், பதில் சொன்னார்,

"யானை ஒரு குட்டியோட இருக்கு. சத்தம் போடாம அமைதியா இருங்க! போயிரும்"

எனக்கு வியர்வை சுரப்பி மட்டுமல்லாமல், சிறுநீர் சுரப்பியும் சொல்லாமலேயே வேலை செய்தது. வெட்கத்தைவிட்டுச் சொல்லப்போனால், என் வாழ்க்கையில் பயத்தில் சிறுநீர் முட்டியது அதுவே முதல் முறை. ‘அவ்வளவு பெரிய யானைக்கு இம்புளிக்காண்டு உச்சாகூட வரவில்லை என்றால் யானைக்கென்ன மரியாதை?’ இருக்கும் கவலை போதாதென, அங்கிருந்த யாரோ ஒருவர், கையில் இருந்த டார்ச்சைக் காட்டிற்குள் அடித்தார். அங்கிருந்த அனைவரும் பதறிப்போயினர்.

எல்லோரும் சற்று சத்தமாக முனுமுனுக்கவும், உடனே அவர் டார்ச்சை அமத்தினார். யானை வேகமாக நடக்கும் சத்தம் கேட்டது. கத்தும் சத்தமும் மெல்ல மெல்ல அருகில் கேட்டது. எங்கும் ஓடாமலேயே எனக்கு மூச்சு வாங்கியது. எனது கடைசி நிமிடங்கள் அது என முடிவு செய்துவிட்டேன். அங்கிருந்த ஒருசிலர் உட்கார்ந்தபடியே நகர ஆரம்பித்தனர்.

அவர்கள் செருப்பு ஏற்படுத்திய சத்தம் என் காதினுள் நுழைந்து மூளையில் ஒலித்தது. யானைக்கு இருக்கும் பெரிய காதில் இந்தச் சத்தம் கண்டிப்பாக விழுமே என பயத்தில் செத்துக்கொண்டிருந்தேன்.

என் கன்ட்ரோலைத் தாண்டி கண் கலங்கியது. எனக்காக கதறி அழ காதலியுமில்லை, யாருக்கும் போன் செய்து பேச போனில் டவருமில்லை, இருந்த கொஞ்ச நண்பர்களும் என்னோடு சேர்ந்து சாக காத்திருக்கிறார்கள். இதில் முக்கியமான பயம் என்னவென்றால், நான் வெள்ளியங்கிரி வந்திருப்பது என் பெற்றோருக்குத் தெரியாது.

என் வாழ்க்கை அவர்களிடம் சொன்ன பொய்யோடு முடியப்போவதாக எண்ணி மிகவும் வருந்தினேன். என்னைப் பெற்ற அந்த இரண்டு பேருக்காகத்தான் என் மனம் போராடியது. அவர்கள்மேல் எனக்கு எவ்வளவு பாசம் உள்ளதென அப்போதுதான் புரிந்தது.

நான் அந்த கணத்தில் நினைத்ததெல்லாம் இருக்கும் ஒரு குழந்தையைத் தொலைத்துவிட்டு அந்த ஜோடி என்ன செய்யும் என்றுதான். நாத்திக கானம் பாடிக்கொண்டிருந்த என் நாக்கு, இருக்கும் அனைத்து கடவுளுக்கும் சேர்த்து ஒரு கும்புடைப் போட்டது.

“கடவுளே என்னைய எப்புடியாச்சும் இங்க இருந்து காப்பாத்தி உயிரோட கூட்டிட்டு போயிரு. ஒன்னக் கெஞ்சிக் கேக்குறேன். இத்தன நாளா ஒன்ன நம்பாம இருந்ததுக்கு மன்னிச்சுரு. நா மட்டும் பத்தரமா வெளில போயிட்டா இனிமே நல்ல புள்ளையா இருப்பேன், கெட்ட வார்த்த பேசமாட்டேன், டெயிலி கோயிலுக்கு போறேன், கெட்ட பழக்கம் எதுவும் பண்ண மாட்டேன், ஒனக்காக மொட்ட போடுறேன். என்னய எப்புடியாச்சு.... (Read More)”

என என் மனம் கதறிக்கதறி கண்ணீர் விட்டது. உண்மையிலேயே கண்கள் கலங்கி கீழே கொட்டியது. சற்று நேரம் ஆனதும் சாமி கும்பிடும் பாணி மாறியது.

“ஏய் கடவுளே....! நீ மட்டும் நெஜமாவே இருந்தீன்னா… என்னய காப்பாத்து. கடவுள் இல்ல பொய்யின்னா என்னய சாக விட்ரு. கடவுள் இருக்கா இல்லையான்னு எனக்கு இப்ப தெரிஞ்சுரும். இது உன் மேல சத்தியம்…. (Read More)”

அப்போதுதான் எனக்குப் பின்னால் ஒரு மரக்கிளை சத்தமாக ஆடும் சத்தம் கேட்டது. கடவுளிடம் நான் திமிறாக பேசியதால் கோவித்துக்கொண்டாரோ என எண்ணி உடனே மன்னிப்பும் கேட்டேன். ஆனால் அங்கு வந்த ஒரு பெரியவர் எக்கி எக்கி மரக்கிளை ஒன்றை பிய்த்துக்கொண்டிருந்தார். அந்த கிழவனைப் பார்க்கவும் எல்லோரும் பதறினர். அவர் அங்கு யானை இருப்பது தெரியாமல் கிளையை உடைத்து அதை ஊன்றி நடந்து வந்தார். எனக்கு இதயம் வெளியில் வந்து விழுந்துவிடுவது போல வேகமாகத் துடித்தது. அந்தக் கிழவன் ஏற்படுத்திய ஒவ்வொரு சத்தமும் என் உயிரைக் கையில் பிடித்துக்கொள்ள வைத்தது. அந்த யானை வேகமாக நகரும் சத்தமும் கேட்டது. அவர் எங்கள் அருகே வந்ததும் அவரிடம்,

“யானை யானை”

எனச் சொல்லி உட்கார வைத்தோம். அவர் ஒழுங்காக உட்காராமல்

“என்ன யானை”

என மீண்டும் எழுந்து நின்றார்.

மீண்டும் அந்தச் சத்தம் கேட்டது. அவர் அதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. காது கேட்காது என நினைத்தேன். அது யானை சத்தமென மற்றவர்கள் சொல்ல அவர் சத்தமாக,

“யானையா... அது மான் டா மடப்பயலுகலா. இங்க மான்தான் நெரையா கெடக்கும்” என நடக்க ஆரம்பித்தார்.

“இங்க யானைலாம் வராது” என மேலும் நகர்ந்து சென்றார். நாங்கள் மெதுவாக எழுந்து ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். சில நொடி அமைதிக்குப் பின்னர் அனைவரும் மெதுவாகச் சிரிக்கும் சத்தம் கேட்டது.

“ச்சை” என நாங்களும் சிரிக்க ஆரம்பித்தோம். கண்ணீருடன் மிகுந்த நிம்மதியுடன் எனக்கு நன்றாகச் சிரிப்பு வந்தது. உடனே அனைவரும் காட்டிற்குள் டார்ச் அடித்துப் பார்த்தனர். எனக்கு ஒன்றும் தெரியவில்லை. சிலர் மட்டும், ஒரு மான் இரண்டு மான் எனப் பேசிக்கொண்டனர்.

அது யானை, அதனுடன் ஒரு குட்டி, அது பெரியப்பா பெரியம்மா எனக் கதை கட்டிய அந்த அண்ணனைத் தேடினோம்.

இருட்டில் அவர் முகத்தைப் பார்க்காததால் அது யாரெனத் தெரியவில்லை. ஆனால் அது எங்களைக் கடந்து சென்ற முகங்களில் ஒன்றுதான் என எங்களுக்கு நன்றாகத் தெரியும். 'எவன்டா அது' என எல்லோரும் தேடினோம். அந்த அண்ணனும் கண்டிப்பாக தேடுவதுபோல் நடித்திருப்பார். அந்த மான்கள் கண்ணில் நாங்கள் ஜோக்கராக தெரிந்திருப்போம். அந்த அண்ணனின் கண்ணுக்கும்தான்.

அங்கிருந்து உயிருடன் தப்பித்து நடக்க ஆரம்பித்த பின்னர் எந்தக் கடவுளுக்கும் நான் நன்றி சொல்லவில்லை. மொட்டையும் போடவில்லை, சொன்ன எதையும் கடைபிடிக்கவுமில்லை. நாந்தான் அக்மார்க் நாத்திகன் ஆயிற்றே! மானிடமிருந்து எனக்குத் தப்பிக்கத் தெரியாதா என்ன?

பின் மெதுவாக சிரித்துக்கொண்டே மலையில் ஏற ஆரம்பித்தோம். அந்தக் கும்மிருட்டில் எங்கள் பயணத்தை நடுக்கத்தோடு தொடர்ந்தோம், பயத்தில் இல்லை, பனியில். மேலே ஆறாவது மலையில் எங்களுக்காக ஒரு முதலை காத்திருந்தது, ஆனால் அது வேற கதை. அதை பின்னால் பார்ப்போம்.

கஷ்டப்பட்டு ஏழாவது மலையை ஏறிமுடித்தபோது சரியாக விடிய ஆரம்பித்தது. உண்மையிலேயே அந்த விடியல் நான் நினைத்ததை விடவும், மனதிற்கு இதமாக இருந்தது. அந்த இடத்தை, நேரத்தை மனதில் நன்றாக வாங்கிக்கொண்டு கொஞ்ச நேரத்தில் மீண்டும் கீழே இறங்க ஆரம்பித்தோம், அந்த யானைக் கதையை பேசிக்கொண்டே…

இப்படி மானை யானை எனக்கூறி நமைப் பயமுறுத்தும் பலர் நம்மோடு இருக்கலாம், நாமேகூட தவறாக நினைத்து பல விஷயங்களைச் செய்ய பயத்தோடும், தயக்கத்தோடும் அங்கேயே கும்மிருட்டில் குன்னிக்கிடக்கலாம்.

ஆனால் அதிலிருந்து விடுபட்டு வெளியில் வந்தால்தான் பல நல்ல அனுபவங்களும் வாழ்க்கை சுவைகளும் கிடைக்கும் என்பதை அந்த முகம் தெரியாத அண்ணனால்தான் தெரிந்துகொண்டேன். நாம் பயந்து செய்யாமல் இருக்கும் பல விஷயங்கள் உண்மையில் எளிதானவை, அதிக மகிழ்ச்சி தரக்கூடியவை என்பதையும் பின்னால்தான் தெரிந்துகொண்டேன்.

ஒருவேளை அந்த அண்ணன் இதைப் படித்துக்கொண்டிருந்தால், நாங்கள் அவருக்கு "கொம்பன் மாமா" எனப் பட்டப்பெயர் சூட்டியிருக்கிறோம் என்பதையும் இப்போது பல மாவட்டங்களில் பிரிந்து சம்பாதிக்கும் முனைப்பில் மூழ்கிக்கிடக்கும் நாங்கள் என்றாவது ஒன்றுகூடும்போது அவர் உருவாக்கிக்கொடுத்த அந்த நினைவை எண்ணி வயிறு வலிக்கச் சிரிக்கிறோம் என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

டூர்

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.

இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.

வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.   

பரிசுத்தொகை விவரம்:

  • முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)

  • இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)

  • நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)

நினைவில் கொள்க: 

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

  • கட்டுரையின் தரத்தின்  அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Travel contest: `இது சந்தோச பூமி’ - பயங்களை மீறி காஷ்மீர் சென்று வந்த அனுபவம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: "ஆண்டுக்கு 75 முறை மின்னல் தாக்கும்" - காற்றில் அசையும் டவர்; கனடா சுற்றுலா அனுபவம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest : பாண்டி டு பாரீஸ்! - நடைமுறை என்ன? சுத்தி பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கேரளா: `மலரிக்கல்' ஆச்சர்ய கிராமம்; சுற்றுலா பயணிகள் விரும்புவது ஏன்?

God's Own Country என்று அழைக்கப்படும் கேரளா, பலரின் விருப்பமான சுற்றுலா தலமாக உள்ளது. கேரளாவில் பாரம்பரிய இடங்கள் முதல் அட்வென்ச்சர் ஸ்பாட்ஸ் வரை பார்ப்பதற்கு பல இடங்கள் உள்ளன. இயற்கை ஆர்வலர்கள் பெரித... மேலும் பார்க்க

Travel Contest: ரயில் பயணத்தில் உங்களுக்கு பிடித்த உணவுகளை ஆர்டர் செய்யலாம்.. எப்படி?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: "நீங்க தமிழ்நாடா?" - தெற்கு கர்நாடகா கோயில் தரிசன சுற்றுலா அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க