காவலர்களுக்கு வார விடுமுறை: அரசு உத்தரவை அமல்படுத்தக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!
மதுரை: தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வார விடுமுறையளிக்கப்பட வேண்டும் என்கிற அரசு உத்தரவை அமல்படுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையில், காவலர்களுக்கென தனியாக சங்கங்கள் இல்லாதது ஏன்? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படும் என்று கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்திருந்த அரசாணையை அமல்படுத்த வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று(ஏப். 21) சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கின் விசாரணையில், தமிழக காவல்துறை டிஜிபி விரிவான விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சங்கங்கள் இருக்கும்போது, காவல்துறைக்கு ஏன் சங்கங்கள் இல்லை?
காவலர்களுக்கு விடுமுறை தொடர்பான அரசாணையை காவல் துறை உயரதிகாரிகள் முறையாக பின்பற்றாதது ஏன்? காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என்ற அரசாணை எந்த வகையில் பின்பற்றப்படுகிறது?’ ஆகிய கேள்விகளும் நீதிமன்றத்தால் எழுப்பப்பட்டுள்ளன.
இந்த விசாரணையில், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் காவலர்களுக்கு சங்கங்கள் இருப்பதும் நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.