ஷுப்மன் கில், சாய் சுதர்சன் அதிரடி: கொல்கத்தாவுக்கு 199 ரன்கள் இலக்கு!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, குஜராத் டைட்டன்ஸ் முதலில் விளையாடியது.
இதையும் படிக்க: அடுத்த சீசனுக்கான வலுவான பிளேயிங் லெவனை உருவாக்க வேண்டும்: எம்.எஸ்.தோனி
சாய் சுதர்சன், ஷுப்மன் கில் அதிரடி
முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். 114 ரன்களுக்கு குஜராத் அணி அதன் முதல் விக்கெட்டினை இழந்தது. அதிரடியாக விளையாடிய சாய் சுதர்சன் 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
அதன் பின், கேப்டன் ஷுப்மன் கில்லுடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். களமிறங்கியது முதலே பட்லரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷுப்மன் கில் 55 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் அதிரடி காட்டிய பட்லர் 23 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா மற்றும் ஆண்ட்ரே ரஸல் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: அடுத்த சீசனை நோக்கி நகரும் சிஎஸ்கே: அம்பத்தி ராயுடு
199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது.